தமிழக முழுவதும் அதிமுக சார்பில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கறிவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் அதிமுக சார்பில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விருத்தாசலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட டாடா ஏசி வாகனத்தின் மூலம் ஏராளமான கட்சி தொண்டர்களை ஏற்றி வந்தனர்.

 

பின்னர் கூட்டம் முடிந்த பிறகு அனைவரும் அந்தந்த பகுதியில் இருந்து வந்த மக்களை டாடா ஏசி மூலம் கொண்டு சென்ற நிலையில் விருத்தாச்சலம் அடுத்த வண்ணான்குடிகாடு கிராமத்தில் கூட்டத்திற்கு வந்த பொதுமக்களை இறக்கிவிட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் - சங்கரி தம்பதியின் இரண்டாவது மகள் சமித்தா (4 வயது) தாயுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

 

 அதிமுக கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தை முடித்துவிட்டு பொதுமக்களை இறக்கி விட்டு அதிவேகமாக வந்த டாடா ஏசி தாயின் கண் முன்னே சிறுமி சமித்தா மீது பலமாக மோதியது. இதில் சிறுமி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்ததை கண்டு கதறி அழுதார்.

 

உடனே அங்கிருந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இச்சம்பவம் குறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.