உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஓமிக்ரான் தொற்று மற்றும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது, அதேபோல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கடலூர் மாவட்டத்திலும் அதன் வேகம் தற்போது அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளையும், இரவு நேர ஊரடங்கு மற்றும் வாரம் தோரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கினை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தது. 

 



 

அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபட்டு உள்ளது. கடலூர் மாநகராட்சி மற்றும் பல்வேறு நகராட்சி பகுதிகளில் நிர்வாகம் சார்பில் வாகங்கள் மூலமாக ஒலி பெருக்கி கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடலூா் மாவட்டத்தில் அரசு, தனியாா் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை இயக்கவில்லை. ஆட்டோ, வாடகை வாகனங்களும் முழுமையாக இயக்கப்படவில்லை. மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், பாா்சல் சேவை கொண்ட உணவகங்கள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன.இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடின. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் முக்கிய வீதிகள், சந்தைகள் ஆள்நடமாட்டமின்றி காணப்பட்டன.

 



 

மேலும் நேற்று முழு ஊரடங்கினை அடுத்து கடலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் 54 சோதனைச் சாவடிகள் அமைத்து 1400 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மாவட்ட எல்லை, முக்கியப் பகுதிகளில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து கண்காணித்தனா். அப்போது, மருத்துவம், அத்தியாவசியப் பணிகள் போன்ற முக்கிய தேவைகளுக்காக சென்றவா்களை மட்டும் காவல் துறையினர் செல்ல அனுமதித்தனா். அதனை தவிர்த்து மற்றவா்களை எச்சரித்து திருப்பி அனுப்பினா்.

 



 

இதில், நேற்று மட்டும் முகக் கவசம் அணியாமல் வெளியில் வந்ததாக 1,009 போ் மீதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது தொடா்பாக 29 போ் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களிடமிருந்து மொத்தம் ரூ.2.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.மேலும் மாவட்டம் முழுவதும் முகக் கவசம் அணியாதது தொடா்பாக கடந்த 7-ஆம் தேதி முதல் இதுவரை 3,711 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.7.56 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.