கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று திடீரென திருமணம் முடிந்த கையுடன் ரஞ்சித் குமார், எதித் எனும் தம்பதியினர் தங்களது குடும்பத்தாரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மணப்பெண் சார்பில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது. தான் பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள நெல்லித்தோப்பு என்னும் பகுதியை சேர்ந்தவர், தானும் கடலூர் ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக காதலித்து வந்தோம், இது குறித்து இரு வீட்டாரின் பெற்றோர்களும் தங்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்து இருந்தனர். ஆனால் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் பெற்றோர் தனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து உள்ளனர், பின்னர் இது குறித்து கேட்டதற்கு தாங்கள் சொல்வதை மட்டும் கேட்டு நடக்க வேண்டும் என தன்னை தொடர்ந்து மிரட்டி வந்தனர்.




பின்னர் இதனை காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு தன் காதலர் ரஞ்சித்குமார் உடன் வீட்டைவிட்டு வெளியேறினேன் பின்னர் இன்று காலை இருவருக்கும் வரக்கால்பட்டு வில்லு கட்டி அய்யனார் கோவில் திருமணம் நடந்து முடிந்தது. இதனை அறிந்த இருவரின் பெற்றோர் தங்களை இழிவாக பேசியும், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் ஆதலால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணமகன் ரஞ்சித் கூறுகையில், தாங்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்தோம் பின்னர் ஒரு கட்டத்தில் பெற்றோரிடம் இது குறித்து கூறினோம் ஆனால், தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்பதால் தங்களை பெற்றோர்கள் ஏற்க மறுத்து வந்தனர். ஆதலால் கோயிலுக்கு சென்று திருமணம் செய்துகொண்டோம். பின்னர் இன்று காலை திருமணம் முடிந்தது முதல் பெற்றோர் தொடர்ந்து தங்களை அச்சுறுத்தி வருகின்றனர். மேலும் தங்களை கொலை செய்துவிடுவோம் என கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஆதலால் காவல்துறை தங்களுக்கு பாதுகாப்பு அளித்து பெற்றோரிடம் பேசி சேர்த்து வைக்க வேண்டும் என கூறினார்.




மேலும் காவல் துறையினர் தங்களின் பெற்றோர்களிடம் இது குறித்து பேசுவதாக நம்பிக்கை தெரிவித்து உள்ளனர் என கூறினர்.  திடீரென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திடீரென மாலையும் கழுத்தும் ஆக மணமக்கள் வந்ததால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.