புதுச்சேரி கொரோனா அலை ஏற்பட்டால் சமாளிக்க புதுவை அரசு மருத்துவமனைகளில் 450 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். சீனாவில் புதிய வகை வைரஸ் தாக்குதல் காரணமாக உலக நாடுகள் பாதுகாப்பை தீவிர படுத்திவருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவிலும் நோய் தடுப்பு ஒத்திகைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையான  கோரிமேடு மார்பக நோய் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வல்லவன், சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோர் முன்னிலையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடந்தது. படுக்கை வசதிகள், ஆக்சிஜன் செலுத்தும் வசதி, கழிவறை வசதி ஆகியனை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது கொரோனா பொறுப்பு அதிகரி ரமேஷ், துணை இயக்குனர் ரகுநாத், மார்பக நோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


ஆய்வினை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வல்லவன் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-


கடந்த காலங்களில் சிறப்பான செயல்பாடுகளால் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து நிறைய உயிரிழப்பை தடுக்க முடிந்தது. தற்போது புதிய வகை வைரஸ் பரவல் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தியதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுவையை பொறுத்தவரை தற்போது காசநோய் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 450 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தேவைப்பட்டால் கூடுதல் படுக்கைகள் ஒதுக்கப்படும். தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போது 125 வென்டிலேட்டர்களும், 2 ஆயிரம் நெபுலைசர்களும் தயார் நிலையில் உள்ளன. நோயாளிகள் எண்ணிக்கை அதிகமானால் கடந்த காலங்களைப்போல் தனியார் மருத்துவமனைகளையும் பயன்படுத்தலாம்.


மரபணு சோதனை ஆய்வுக்கூடமும் தயாராக உள்ளது. முன்பு இதற்காக பெங்களூருக்கு மாதிரிகளை அனுப்பினோம். தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் நம்மிடம் உள்ளது. எனவே பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. பொதுவாக மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை முன்பு போல கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருந்து எடுக்காமல் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதித்து மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். புதிய கட்டுப் பாடுகள் குறித்து அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அதுதொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும். புதுவையில் தற்போது 3 பேர்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஆனால் அவர்கள் யாருக்கும் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வல்லவன் கூறினார்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.