விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரம் செயல்பட்டு வந்தது. இந்த ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் அடித்து துன்புறுத்தப்பட்டது, அங்கிருந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, ஆசிரமத்தில் இருந்த சிலர் மாயமானது போன்ற அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின், மேலாளர் பிஜூமோன் மற்றும் ஆசிரம பணியாளர்கள் 6 பேர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, ஆசிரம நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் 7 பேருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இவர்கள் 7 பேரும், சென்னையில் தங்கியிருந்து, சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என, நிபந்தனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆசிரமத்தில் ஆதரவற்றோர் மாயமானது, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தொடர்பாக, சிபிசிஐடி விசாரிக்கும் இவ்வழக்கில், ஜாமீன் கோரி ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின் மற்றும் பணியாளர் 7 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆசிரம நிர்வாகிகள் மீதான வழக்கில் 2 மாதங்களாகியும், புலன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், யூகங்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் தனிநபர் சுதந்திரத்தை பறிக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்