விழுப்புரம்: ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை திருப்பி அளிக்க வேண்டும் என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
பஞ்சமி நிலம் மீட்பு கருத்தரங்கம்
விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பஞ்சமி நிலம் மீட்பு தொடர்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன்:
ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை திருப்பி அளிக்க வேண்டும் என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. அவர்களின் கோரிக்கைக்கு நாங்கள் துணை நிற்போம்.
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் திட்டத்தில் தேர்தல் ஆணையம் பணிய துவக்குவதாக அறிவித்துள்ளது. இது அரசியல் சாசனத்தின் மீது தொடுக்கப்படக்கூடிய தாக்குதல். ஏற்கனவே பீகாரில் 65 லட்சம் வாக்களிக்கும் மக்களை நீக்கியுள்ளனர். குஜராத்திலும் நீக்கி உள்ளனர். தமிழ்நாட்டிலும் அதே நோக்கத்தில் தான் செயல்படவுள்ளனர் என்பதால் உறுதியாக எதிர்க்க விரும்புகிறோம். லட்சக்கணக்கான மக்களின் வாக்குகளை பறிக்கும் நோக்கோடு தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. கண்டறிவது, பிறகு நீக்குவது, நீக்கியவர்களை இந்தியாவிலேயே அகதிகளாக மாற்றுவது தான் திட்டம். எஸ்.ஐ.ஆர் துவக்கம் திமுகவும், திமுக கூட்டணியும் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதுதான். திமுக சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக உள்ளது. எனவே சிறுபான்மையினர் வாக்குகளை குறி வைக்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் வாக்குகளை குறி வைக்கிறார்கள்
ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் வாக்குகளை குறி வைக்கிறார்கள். தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தில் தன்னாட்சி அமைப்பு, இதனை ஒன்றிய அரசு வளைக்கிறது. ஜனநாயக விழுமியங்கள், நாடாளுமன்ற விழுமியங்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. எனவே தான் வருகிற இரண்டாம் தேதி தமிழ்நாடு முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ளும். தமிழ்நாட்டின் உரிமைக்காக நாடாளுமன்ற ஜனநாயகத்தை காக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கும், போராட்டங்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும்.
எஸ்.ஐ.ஆர் திட்டத்தை அதிமுக ஆதரிப்பது குறித்த கேள்விக்கு:
அதிமுக மெல்ல மெல்ல நிறம் மாறும். அது நிறம் மாறக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். அதிமுக ஒரு ஜனநாயக வடிவம் எனவே அந்த ஜனநாயக வடிவத்தை சகோதரர் எடப்பாடி அவர்கள் சிதைக்க கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.
திமுக கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. மேலும் மேலும் நெருக்கமாகியுள்ளது. மேலும் உறுதியாகியுள்ளது. நாங்கள் தான் வெல்லுவோம். தமிழக முதல்வர் துவக்கியுள்ள போராட்டம் தமிழ்நாட்டுக்கானது அல்ல இந்தியா முழுமைக்கும் உள்ள மாநிலங்களுக்கானது. எனவே திமுக தலைமையிலான கூட்டணி வெல்லும், தமிழ்நாடு வெல்லும்.
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை மகாபலிபுரத்தில் விஜய் சந்தித்தது குறித்த கேள்விக்கு:
இந்திய அரசியலில் இப்படி ஒரு நிகழ்வை கேள்விப்பட்டதில்லை. பாதிக்கப்பட்டவளை நோக்கி தான் செல்வோம். நேரு, காந்தி எல்லாம் அவ்வாறு தான் சென்றார்கள். தமிழ்நாட்டில் தந்தை பெரியார் உட்பட அனைத்து தலைவர்களும் அப்படித்தான் சென்றார்கள். இதெல்லாம் தமிழ் மரம, இந்திய மரபு. விஜய் இந்த மரபுகள் எல்லாம் கடந்து செல்கிறார். இது பொது வாழ்வுக்கு நல்லதல்ல.
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, விவசாய கூலி தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணங்களை வழங்க வேண்டும். என்பதை முதல்வரும் கவனிக்க வேண்டும்.