நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலரின் கணவர் பேசியதால் திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர மன்ற கூட்டம் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் கிரிஜா திருமாறன் ஆணையாளர் (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

கூட்டத்தில் நெல்லிக்குப்பம் நகராட்சியில் வரி பாக்கி அதிகமாக உள்ளது என்றும், அதனை வரிவசூல் செய்ய கவுன்சிலர்களுடன் இணைந்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் நகர்மன்ற கூட்டம் மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

 

பின்னர் கவுன்சிலர் முத்தமிழன் பேசும் போது, குறுக்கிட்ட கவுன்சிலர் பூபாலனுக்கும் அவரவர் வார்டுக்குட்பட்ட தேவைகளை கேளுங்கள் எனக்கூறியதால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் கவுன்சிலர் வைக்கும் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் இன்று (நேற்று) கொண்டு வந்துள்ள அனைத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்து கூட்டத்தை முடித்தார்.



 

அப்பொழுது பெண் கவுன்சிலரின் கணவர் பிச்சை என்பவர் திமுக கவுன்சிலர் முத்தமிழனிடம் நகர்மன்ற கூட்டத்தில் அதிக நேரம் நீங்கள் பேசி வருவதால் மற்ற கவுன்சிலர்கள் எப்போது பேசுவார்கள் என கேள்வி எழுப்பினார். அப்பொழுது முத்தமிழன் இங்கு நடைபெறுவது நகர மன்ற கூட்டம் நீங்கள் இதுபோல் இங்கு வந்து பேசக்கூடாது அதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என கேட்டபோது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இந்த நிலையில் பெண் கவுன்சிலர் இலக்கியா கணவர் திமுக இளைஞர் அணி நிர்வாகி சாமிநாதனுக்கும் திமுக கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

 தொடர்ந்து அங்கிருந்த ஜெயபிரபா மணிவண்ணன் கணவர் திமுக நகர செயலாளர் மணிவண்ணன் இதனை தட்டி கேட்டபோது மணிவண்ணனுக்கும் சாமிநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அனைவரையும் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர், இந்த சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் நகர்மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.