பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் புதுச்சேரி ராஜ நிவாஸில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகை வெளி வளாகத்தில் வைக்கப்பட்ட பொங்கல் பானையில் அரிசியை இட்டு உறியடி எடுத்து பொங்கல் விழாவை தமிழிசை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்குமாறு முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் தமிழிசை அழைப்பு விடுத்து இருந்தார். பொங்கல் விழா இன்று காலை 8 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. முதல்வர் ரங்கசாமி தவிர, தமிழிசை அழைப்பு விடுத்து இருந்த அனைவரும் வந்தனர். இதையடுத்து விழா முடிந்து சேர்கள் அகற்றபட்டன. நிகழ்ச்சிக்கு வந்தவர்களும் வெளியேறினர்.
இந்த நிலையில் சுமார் 2.30 மணி நேரம் தாமதமாக, அதாவது காலை 8 மணிக்கு சொன்ன நிகழ்ச்சிக்கு 10.35 மணிக்கு முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் மாளிகைக்கு வந்தார். பின்பு தமிழிசைக்கு பொன்னாடை போர்த்தி விட்டு, வரவேற்றார். இருப்பினும் முதல்வர் ரங்கசாமி தாமதமாக வந்தால் அங்கு அதிருப்தி அடைந்தனர்.
மேலும், புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கரகாட்டம், புலி ஆட்டம், மானாட்டம், மயிலாட்டம் என கிராமிய நடனங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாட்டுவண்டி ஊர்வலத்தை துணை ஆளுநர் தமிழிசை துவக்கி வைத்தார். விழாவில் சிறுதானிய விருந்து அளிக்கப்பட்டது. தர்பூசணி ஜூஸ், கம்பு லட்டு, ராகி சேமியா கேசரி, சிறுதானிய இட்லி, சிறுதானிய வடை, சேமியா பாயாசம், தினை பொங்கல், குதிரைவாலி பொங்கல், திணை மாவு தோசை போன்றவை உணவாக வழங்கப்பட்டன. அப்போது தப்பாட்டம் வாசித்த போது, மெய் மறந்து பார்த்த பெண் அமைச்சர் சந்திர பிரியாங்கா, தனது தலையை ஆட்டியும், காலை தரையில் தட்டியும் ரசித்து பார்த்தார்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்