புதுச்சேரி தனியார் மருந்து நிறுவன காசாளரை கத்தியால் வெட்டி பணம் வழிப்பறி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் தனியார் மருந்து நிறுவன காசாளராக பணிபுரிந்து வருபவர் பாலசுப்ரமணியன் (வயது 64). இவர் கடந்த 5-ந் தேதி வசூல் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றனர். தரமறுக்கவே பாலசுப்ரமணியனை கத்தியால்வெட்டி ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டதன் பேரில் காவல் கண்காணிப்பாளர் பக்தவச்சலம் உத்தரவில் கோரிமேடு காவல் ஆய்வாளர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது இந்த துணிகர செயலில் ஈடுபட்டது லாஸ்பேட்டை புதுப்பேட்டையை சேர்ந்த மெல்வின் (வயது 24), அசோக் நகரை சேர்ந்த கிஷோர்குமார் (25) என்பது தெரியவந்தது. இந்த வழிப்பறிக்கு கணேஷ்நகரை சேர்ந்த கந்தசாமி (22), சோலைநகர் சந்துரு (22), ஆகியோர் உறுதுணையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அந்த கம்பெனியில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரான சுதர்சன் (24) என்பவர் மூலம் பாலசுப்ரமணியன் அடிக்கடி பணம் கொண்டு செல்வதை தெரிந்து அவர்கள் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள், கத்தி, இரும்பு பட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்