தீபாவளி பரிசு தந்த முதல்வர்.... கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்...!

கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் 1,579 விவசாயிகள் பெற்றிருந்த விவசாயக் கடன் ரூ.11.61 கோடி தள்ளுபடி.

Continues below advertisement

புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் 1,579 விவசாயிகள் பெற்றிருந்த விவசாயக் கடன் ரூ.11.61 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபாவளி முன்னிட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Continues below advertisement

விவசாயக் கடன் ரூ.11.61 கோடி தள்ளுபடி

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த 2021 - 2022 பட்ஜெட் கூட்டத் தொடரில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செயல்படும் பிரதம கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த நடவடிக்கைகளுக்காக விவசாய உறுப்பினர்கள் பெற்று மார்ச் மாதம் 31ம் தேதி 2022 ஆண்டு வரையிலான காலத்திற்கு திருப்பிச் செலுத்தப்படாமல் உள்ள அசல் வட்டி மற்றும் அபராத வட்டி அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

1,579 சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தொகை ரூ.11.61 கோடி தள்ளுபடி

அதன் அடிப்படையில் பிரதம கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் 1,579 சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தொகை ரூ.11.61 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது (உறுப்பினர்களின் அசல் ரூ. 10.21 கோடி, வட்டி ரூ.51.74 லட்சம் அபராத வட்டி ரூ.87.85 லட்சம்) இந்த தொகையில் முதல் தவணையாக அரசால் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.2 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய விவசாய கடன் வழங்க அறிவுறுத்தப்படும்

இதுதொடர்பாக முதல்வர் அலுவலகத் தரப்பில் விசாரித்த போது, முதல் தவணை போக மீதி தொகையான ரூ.9.61 கோடி இரண்டு தவணைகளில் புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தனர். அனைத்து பிரதம கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் புதுவை மாநில கூட்டுறவு வங்கி உடனடியாக மேற்படி விவசாயிகளின் கடன் கணக்குகளை நேர்செய்து புதிய விவசாய கடன் வழங்க அறிவுறுத்தப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி கடிதம் தீபாவளிக்கு பிறகு நடைபெற உள்ள அரசு விழாவில் துணை நிலை ஆளுநர். முதல்வர், அமைச்சர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தீபாவளி முன்னிட்டு வந்த இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Continues below advertisement