கடலூரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த மற்றும் கடத்திய 88 பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியர் குப்பம் மீனவ கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்தனர். அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் விஷம் கலந்த சாராயத்தை குடித்துள்ளதாக தெரிவித்தனர். அதில் 38 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்துதல் தொடர்பாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

 

அதன்படி மதுவிலக்கு அமல்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட போலீசாரின் தலைமையில் அதி தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டதில் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாச்சலம், திட்டக்குடி மற்றும் சேத்தியாத்தோப்பு ஆகிய 7 உட்கோட்டங்களில் சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த 88 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 22 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

 

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 226 லிட்டர் சாராயமும், 517மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுகடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக போதைதடுப்பு எண்ணான 7418846100 தொடர்பு கொண்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண