கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேராக மோதி பயங்கர விபத்து
புதுச்சேரி அருகே உள்ள நோணாங்குப்பம் பாலத்தில் கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேராக மோதிய பயங்கர விபத்தில், ஆற்றில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் சி.முட்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். (வயது 32) இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை பணிக்கு வந்தவர் பணியை முடித்து விட்டு வழக்கமாக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டு கொண்டு இருந்தார்.
ஆற்றில் தூக்கி வீசப்பட்ட வாலிபர்...
இந்த நிலையில் புதுச்சேரி அடுத்த நோணாங்குப்பம் பாலத்தில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் முன்னால் சென்ற பள்ளி வாகனத்தை முந்தும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உடல் நசிங்கிய நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த சந்தோஷ் குமார் ஆற்றில் தூக்கி வீசப்பட்டார். மேலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த பூர்ணாங்குப்பத்தை சேர்ந்த பெண்மணியம் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.
நீண்ட நேர தேடலுக்குப் பின் சடலமாக மீட்பு
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட வாலிபரை தேடி கிடைக்காததால், அருகில் உள்ள படகு குழாமில் இருந்து படகு வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆற்றில் உடலை தேடினர். நீண்ட நேர தேடலுக்குப் பிறகு சந்தோஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டார். உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய ஓட்டுநரை வலை வீசி தேடி வருவதுடன் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பாலத்தில் விபத்து நடந்ததால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், நோணாங்குப்பம் பாலத்தில் காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதும் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.