விழுப்புரம்: மயிலம் அருகே உள்ள கீழ்சித்தாமூர் விவசாய நிலத்தில் உள்ள பனைமரம் ஒன்றில் 5க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட பனைமரம் அதிசயத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, பனைமரம் ஒரு தண்டுடன் நேராக வளரும், ஆனால் சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கிளைகளுடன் வளரும் மரங்களும் உள்ளன. அந்தவகையில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கீழ்சித்தாமூர் விவசாய நிலத்தில் உள்ள பனைமரம் ஒன்றில் இப்பகுதியில் 5க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட பனைமரம் அதிசயத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கற்பக தருவான பனை மரங்களின் அனைத்து பொருட்களும் பயன் தரும். விவசாய நிலத்தின் கரைப்பகுதியில் அதிகளவு பனை மரங்கள் நடவு செய்யப்படும். பனை மரம் இருந்தால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் இந்த பனையில் உள்ள கிளைகள் செழித்து வளர்கிறது. இந்த கிளைகளிலும் நுங்கு, உள்ளிட்ட பனைப்பொருட்கள் கிடைத்து வருகிறது. 5க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட பனை மரத்தை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
பனைமரம்
பனைமரம் ஒரு வெப்ப மண்டல தாவரம். மிகவும் அபூர்வமாக சில பனை மரங்கள் கிளைகளுடன் வளரும். உலகம் முழுவதும் சுமார் 14 கோடி பனை மரங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக இந்தியாவில் 6 கோடி பனை மரங்கள் உள்ளன. இந்தியாவுக்கு அடுத்தபடியாக மேற்கு ஆப்பிரிக்காவில் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இதுதவிர இலங்கை, இந்தோனேசியா, மடகாஸ்கர், மியான்மர், கம்போடியா, தாய்லாந்து நாடுகளிலும் அதிக அளவில் இருக்கின்றன. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன.
பனை மரத்தின் வேர் முதல் உச்சியில் உள்ள ஓலை வரை எல்லாமே பயன்படக்கூடியவை. பனை மரத்தின் இலையைத்தான் ஓலை என்கிறோம். பனை மரத்தின் பாளையில் இருந்து கிடைக்கும் சாறு பதநீர் எனப்படுகிறது. சிறிதளவு சுண்ணாம்பு சேர்க்கப்பட்டு பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் பதநீர் மிகவும் சுவையானது மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது.
ஜெல்லி போன்று மிருதுவாக இருக்கும் நுங்கு, ஐஸ் கட்டியை விழுங்குவது போன்று ஜில்லென்று சுவையாக இருக்கும். இதனால்தான் நுங்கை ‘ஐஸ் ஆப்பிள்’ என்கிறார்கள். மஞ்சள் நிறத்தில் திடமான கூழ் போன்று காணப்படும் பனம் பழமும் சுவை மிகுந்தது. இதை நெருப்பில் சிறிது சுட்டு சாப்பிட்டால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். பனங்கொட்டையின் மூலம் பூமிக்கு அடியில் வளர்ந்து கிடைக்கும் பனங்கிழங்கு நார்ச்சத்து மிகுந்தது.
பனை ஓலை கூரை வேயவும், பெட்டி, கூடை, விசிறி, பாய், முறம் மற்றும் பூச்சாடி போன்ற கைவினை பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. கயிறு தயாரிப்பு தொழிலில் பனை நார் முக்கிய பங்கு வகிக்கிறது.
பனை மரத்தின் தண்டு எனப்படும் கருநிறம் கொண்ட பிரதான பகுதி வீடு போன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கு உத்திரம், வளையாக பயன்படுகிறது. பறவைகளின் வாழ்விடமாகவும் பனைமரம் விளங்குகிறது. தூக்கணாங்குருவிகள் தங்கள் கூடுகளை கட்ட பெரும்பாலும் பனைமரங்களையே தேர்ந்துதெடுக்கின்றன.
மண் அரிப்பை தடுப்பதில் பனை மரங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால்தான் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் ஏரி மற்றும் குளக்கரைகளில் பனை மரத்தை வளர்த்தார்கள். இப்போதும் அந்த இடங்களில் அவற்றை நாம் பார்க்க முடியும்.