திமுக கூட்டணியில் பாமக வருவது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும் அவர் முடிவு செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்றும் பாமகவில் நிலவும் பிரச்சனைக்கு பாஜக தான் காரணமென காங்கிரஸ் தமிழக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அக்கட்சியின் மாநிலதுணை தலைவர் விஜயன் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்:
40 ஆண்டுகளாக பொது வாழ்வில் இருக்கிற மருத்துவர் ராமதாசை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இதில் எந்தவித அரசியலும் கிடையாது இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு. நேற்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தலைவர் இளைய பெருமாளின் நூற்றாண்டு நிறைவு விழா. இந்நிகழ்வில் நானும் பா சிதம்பரம் அவர்களும் கலந்து கொண்டோம். இரவு புதுச்சேரியில் தங்கிவிட்டு காலையில் சென்னை செல்லும்போது வழியில் மருத்துவர் ராமதாசை சந்தித்து விட்டு செல்கிறேன். அவரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன்.
இந்த சந்திப்பில் கூட்டணியும் இல்லை, அரசியலும் இல்லை. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு. ராமதாசுக்கும், அன்புமணிக்கும் சமாதான பேச்சுவார்த்தை செய்ய நாங்கள் யார். சமாதானமாக இருந்தால் மகிழ்ச்சி. கூட்டணிக்கு பாமக வருவதை திமுக தலைவர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். நான் முடிவு செய்ய முடியாது.
திமுகவில் எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து உள்ளது. மீண்டும் ஆட்சி அமைக்க போறோம். பாமகவின் குழப்பத்திற்கு திமுக தான் காரணம் என அன்புமணி கூறுவது புரிதல் இல்லாமல் பேசுகிறார். நாங்கள் அரசியல் ஏதும் பேசவில்லை. அன்புமணி பாஜகவை சமாதானம் செய்ய அப்படி பேசுகிறார் ஆனால் அவர்களின் உள் மனசு அப்படி பேசாது. பாமகவில் பிரச்சனை ஏற்படுத்த திமுகவுக்கு என்ன தேவை உள்ளது.
திமுக ஏன் பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் இது மாதிரியான அரசியல் அவருக்கு தெரியாது. பாமகவில் பாஜக தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பாஜக யாருடன் எல்லாம் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிகளை எல்லாம் அவர்கள் விழுங்கிவிடுவார்கள். கூட்டணி என கூறிவிட்டு அதிமுகவின் தலைமை கர்த்த அண்ணாவையும், பெரியாரின் கொச்சைப்படுத்தி ஒரு படத்தை வெளியிடுகிறார்கள்.
எங்கள் தலைவர்களை கொச்சைப்படுத்தினால் ஒரு நொடி நாங்கள் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம். உடனடியாக கண்டன அறிக்கை கொடுத்திருப்போம். கூட்டணியைவிட்டு வெளியே வந்திருப்போம். எங்கள் மூதாதையர்களை பலி கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எங்கு உள்ளது. தற்போது அண்ணாவை அதிமுக பலி கொடுத்துவிட்டது. அதிமுக ஏன் காட்டமாக பதில் அளிக்கவில்லை. ஏன் பாஜகவை பார்த்து அதிமுக பயப்பட வேண்டும்.
பாமக நிறுவனர் இந்திய அரசியல கரைத்துக் குடித்தவர். அவர் யார் பக்கம் சாய மாட்டார். அவர் எடுக்கும் முடிவு நியாயமாக இருக்கும். தமிழ்நாட்டுக்கு தேவையான முடிவை அவர் எடுப்பார். கலைஞர் ஒரு முன்னுதாரணம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு ஸ்டாலின் உதாரணம். நான் கூட்டணி குறித்து பேச வரவில்லை. நலம் விசாரிக்க வந்துள்ளேன். திமுக கூட்டணிக்கு பாமக வருவதை முதல்வர் ஏற்றுக் கொண்டால், அது குறித்து நாம் ஒன்றும் சொல்ல முடியாது.
தமிழ்நாட்டு நலனை பாதுகாக்கும் கூட்டணி. தமிழக மக்களை நல்வழிப்படுத்தும் கூட்டணி. தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்கான கூட்டணி தான் இந்தியா கூட்டணி. திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்க நான் முடிவு எடுக்க முடியாது. அகில இந்திய தலைமை தான் முடிவு எடுக்கும். அகிலந்து காங்கிரஸ் தலைமை என்ன முடிவு செய்கிறோம் அதுதான் எங்கள் முடிவு. பலர் அவர்களின் சொந்த கருத்து கூறலாம். ஆனால் அது ஆக்கப்பூர்வமானதாகவும், அதிகாரப்பூர்வ கருத்தாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.