விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் பிரபல தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் தரைதளத்தில் மளிகை பொருட்கள் விற்பனையும், மேல் தளத்தில் துணிக்கடைகள், திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வணிக வளாகத்தில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு நேற்று மதியம் 1.15 மணியளவில் அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பை அங்குள்ள கிளை மேலாளர் ஒருவர் எடுத்து பேசியுள்ளார், அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர் ஒருவர், உங்கள் நிறுவன உரிமையாளரிடம் பேச வேண்டும் என்றும் அவரிடம் தொலைபேசியை கொடுக்குமாறும் கூறியுள்ளார்.


அதற்கு அந்நிறுவன கிளை மேலாளர், தற்போது உரிமையாளர் இங்கு இல்லை என்று கூறவே, உங்கள் நிறுவனங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இதுபற்றி நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார். அவர் இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த வணிக வளாகத்திற்கு விரைந்து சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் வணிக வளாகத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீஸ் மோப்ப நாய் ராணி மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்தனர்.


வணிக வளாகத்தில் உள்ள 4 தளங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் இருந்தனர். இதனால் ஒவ்வொரு தளத்திலும் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற அங்கிருந்த பொதுமக்கள், ஊழியர்களிடம் வெடிகுண்டு மிரட்டல் வந்த தகவலை தெரிவித்து அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். பின்னர், வெடிகுண்டு நிபுணர்களும் தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்று மோப்ப நாய் உதவியுடனும், மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடனும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சோதனை மாலை 6 மணியளவில் முடிவடைந்தது. இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பிறகுதான் இது வெறும் புரளி என்பது தெரியவந்ததையடுத்து பொதுமக்கள், நிறுவன ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.