நாடு முழுவதும் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவிருப்பதாக தமிழ்நாடு தலைமை காஜி அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் ஹஜ் பெருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தங்கள் வேண்டுதலுக்காக இஸ்லாமியர்கள் ஆட்டை வெட்டி குர்பானி கொடுப்பது வழக்கம்.  இந்த நேரத்தில் தமிழகத்தில் அதிகமாக ஆடுகள் வெட்டப்படும் என்பதால் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகும்.


 துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு  ஈதுல் அத்ஹா (பக்ரீத்) ஜூன் மாதம் 17 ஆம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். அன்றைய தினம் இஸ்லாமியர்கள் கூட்டாகவோ, தனியாகவே ஆடுகளை அறுத்து இறைச்சியை உறவினர்கள், ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்து பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். செஞ்சி சந்தையில் மிகவும் பிரசித்தி பெற்றது கருவாடு மற்றும் ஆட்டுச் சந்தை ஆகும். சேலம், தர்மபுரி, வேலூர், ஆம்பூர் போன்ற அண்டை மாவட்டங்களில் இருந்தும், புதுவை, பெங்களுரு போன்ற மாநிலங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் இங்கு நடைபெறும் சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.


வரும் 17-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கூடுதலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் செஞ்சி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்ய செஞ்சி வாரச் சந்தைக்கு வந்து குவிந்தனர். அதற்கேற்றார் போல் கிராமப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.


இதில், பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக செம்மறி ஆடுகள் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையிலும், கருப்பு ஆடுகள் ரூ. 8,000 முதல் ரூ.15,000 வரையிலும் விற்பனையானது. இந்த வாரச் சந்தையில் மட்டும் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் விற்பனைத் தொகை 7 கோடிக்கு மேல் இருக்கலாம் என உள்ளுர் வியாபாரிகள் தெரிவித்தனர்.