சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் அமைந்துள்ள சீக்கியர்களின் முதல் மன்னரான மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு தினத்தை முன்னிட்டு, 509 இந்தியர்களுக்கு விசா பாகிஸ்தான் வழங்கியுள்ளது.

Continues below advertisement

சீக்கியர்களின் முதல் மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங். 18-19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் சுதந்திர இந்தியாவிற்கு முன்பு ஒருங்கிணைந்த இந்தியாவாக இருந்த, தற்போதைய பாகிஸ்தானில் வாழ்ந்தவர். இவர் ஷேர் இ பஞ்சாப் என்று சீக்கியர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.  இவரது மறைவிற்கு பிறகு இவரது நினைவு நாளை சீக்கியர்கள் அனுசரித்து வருகின்றனர். இவரது நினைவிடம் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள லாகூரில் அமைந்துள்ளது.

Continues below advertisement

மகாராஜா ரஞ்சித் சிங் நினைவு நாள்:

இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் ஆண்டுதோறும் பாகிஸ்தானில் அமைந்துள்ள மகாராஜா ரஞ்சித் சிங் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்காக, இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சீக்கியர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் அரசு விசா வழங்கி வருகிறது.

மகாராஜா ரஞ்சித் சிங் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து புனிதப்பயணம் மேற்கொள்ள சீக்கியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக 509 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கியுள்ளது.

புனித யாத்திரை:

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏராளமான சிக்கல்களும், முரண்பாடுகள் நிலவி வந்தாலும் மதரீதியிலான வழிபாடுகளுக்கு எந்த தடங்கலும் இல்லாமல் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதுபோன்ற பல்வேறு புனித யாத்திரைக்காக பாகிஸ்தான் சென்று வருகின்றனர்.

மகாராஜா ரஞ்சித்சிங்கின் நினைவிடம் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. லாகூரில் உள்ள அவரது நினைவிடத்தை அவரது மகன் காரக்சிங் கட்டத் தொடங்கி அவரது இளைய மகன் துலீப்சிங்கால் 1848ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. பாகிஸ்தான் தனி நாடாக ஆன பிறகும், அவரது நினைவிடத்தை அந்த நாட்டு அரசு பாதுகாத்து வருகிறது. 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தின்போது இந்த நினைவிடம் பாதிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் சீர்செய்யப்பட்டது.

குரு அர்ஜூன் தேவின் தியாகி தினத்தில் பங்கேற்பதற்காக 962 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கியிருந்தது. இந்த பண்டிகை கடந்த 8ம் தேதியில் இருந்து வரும் 17ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பைசாகி திருவிழாவில் பங்கேற்க 2 ஆயிரத்து 843 பேருக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் படிக்க: தமிழிசை வீட்டிற்கே சென்ற அண்ணாமலை: என்ன நடந்தது தெரியுமா?

மேலும் படிக்க: Cabinet Portfolio: துணை முதலமைச்சரானார் பவன் கல்யாண்.. ஆந்திர அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிப்பு!

 

Continues below advertisement