ஆரோவில் : பெரிதும் எதிர்பார்க்கப்படும் சர்வதேச அரோவில் இலக்கிய விழா (Auroville Literature Festival) வரும் டிசம்பர் 15 முதல் 21 வரை ஒரு வார காலத்திற்கு மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
அரோவில் இலக்கிய விழா
பெரிதும் எதிர்பார்க்கப்படும் சர்வதேச அரோவில் இலக்கிய விழா (Auroville Literature Festival) வரும் டிசம்பர் 15 முதல் 21 வரை ஒரு வார காலத்திற்கு மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டது.
உயர்மட்ட நிர்வாகக் குழுவின் ஆலோசனை: இன்று நடைபெற்ற விழா ஏற்பாடு குறித்த முக்கிய கூட்டத்திற்கு, ஆரோவில் அறக்கட்டளை செயலாளரும், குஜராத் கூடுதல் தலைமை செயலாளருமான டாக்டர் ஜெயந்தி ரவி (IAS) தலைமை தாங்கினார்.
இவருடன் முன்னாள் ஐ.நா. சபைக்கான இந்தியப் பிரதிநிதி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் திரு. டி.எஸ். திருமூர்த்தி அவர்கள் இணைந்து வழிநடத்தினார். விழா ஒருங்கிணைப்பை உறுதி செய்ய புதுச்சேரி நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளும் இக்கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயலாளர் டாக்டர் டி. மணிகண்டன் (IAS). புதுச்சேரி அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளர் முகமது அஹ்சன் ஆபித் (IAS) பங்கேற்றனர்
மொழிவாரியான நிகழ்ச்சித் தேதிகள் அறிவிப்பு:
பல்வேறு இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிகள் மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன
- டிசம்பர் 15 & 16: சம்ஸ்கிருத மொழி அமர்வுகள் (Sanskrit).
- டிசம்பர் 17 & 18: தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழி அமர்வுகள் (Tamil & French).
- டிசம்பர் 19, 20 & 21: ஆங்கில மொழி அமர்வுகள் (English).
அமைச்சர்கள் பங்கேற்பு மற்றும் அழைப்பு:
விழாவின் நிறைவு நாளான டிசம்பர் 21 அன்று, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சிறப்புரையாற்றுகிறார். முன்னதாக, டாக்டர் ஜெயந்தி ரவி டெல்லியில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனை சந்தித்து, அரோவில் இலக்கிய விழா மற்றும் மார்கழி உற்சவ (டிசம்பர் 16 முதல் ஜனவரி 14 வரை) கொண்டாட்டங்களுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பேச்சாளர்கள்: இவ்விழாவில் பெருநிறுவனத் தலைவர்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகள் பங்கேற்கின்றனர், ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மற்றும் முதலீட்டு வங்கியாளர் ஹர்ஷ் குப்தா ஆகியோர் பொருளாதாரம் சார்ந்த அமர்வுகளில் பங்கேற்கின்றனர். டிசம்பர் 20 அன்று பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஆனந்தா சங்கர் ஜெயந்த் பங்கேற்கிறார்.
ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பங்கஜ் குப்தா (ஆன்மீகம் மற்றும் மேலாண்மை), சஞ்சீவ் சோப்ரா மற்றும் மகரந்த் பரஞ்சபே (வரலாறு மற்றும் கலாச்சாரம்), கவிஞர்கள் அருந்ததி சுப்பிரமணியம் மற்றும் காயத்ரி மஜும்தார், சம்ஸ்கிருத அறிஞர் உதய் ஷ்ரேயாஸ் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர். கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு: இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இவ்விழாவில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகின்றன.