விழுப்புரம்: தைலாபுரம் இல்லத்தில் மூன்று மணி நேரம் ராமதாசை சந்தித்து விட்டு வெளியே வந்த ஆடிட்டர் குருமூர்த்தி நீண்ட கால நண்பர் என்பதால் சந்தித்ததாகவும் பாஜகவிற்காக பேசவரவில்லை என தெரிவித்தார்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் நீடித்து வருகிறது. அடுத்ததாக கூட்டுகின்ற பொதுக்குழுவின்போது தான் வெற்றி பெறுவதுடன் தனது பக்கம் தனிப்பெரும்பான்மை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கையில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களை குறி வைத்து அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் 45 நிமிடங்கள் தனது மூன்றாவது மகள் சஞ்சித்ராவுடன் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபட்டாத என தெரிவிக்காமல் அன்புமணி ராமதாஸ் இறுகிய முகத்தோடு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
அன்புமணியுடன் அவரது மகள் சஞ்சுத்ராவும் வந்திருந்தார். இருவரும் 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, பாமக நிர்வாகிகள் யாரும் தோட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. அங்கு வந்த நிர்வாகிகளும் காத்திருந்து, திரும்பிச் சென்றனர். இந்தச் சந்திப்பு நிறைவடைந்ததையடுத்து, அன்புமணி புறப்பட்டுச் சென்றார். "சமாதானம் ஆகி விட்டீர்களா?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கார் கண்ணாடியை இறக்காமல் கை கும்பிட்டபடியே சென்றார் அன்புமணி. அன்புமணி புறப்பட்ட சில நொடிகளில், தைலாபுரம் தோட்டத்திற்கு ஆடிட்டர் குருமூர்த்தியும், அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் ஒரே காரில் வந்தனர். அவர்களும் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துப் பேசினர்.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த குருமூர்த்தி, “ராமதாஸ் எனது நீண்ட கால நண்பர். அவரை சந்திக்கவே வந்தேன். இது பாஜகவுக்காகவோ அல்லது கட்சி பிரச்சினைகளுக்காகவோ நடந்த சந்திப்பு அல்ல” என்று தெரிவித்தார். “பிரச்சினைகள் இருக்கும் இடங்களுக்கு நான் செல்வதாக கேட்கிறார்கள். ஆனால், நான் செல்லும் இடங்களில்தான் பிரச்சினைகள் வருகின்றன” என்று அவர் பதிலளித்தார்.