விழுப்புரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம், கட்டுக்கட்டாக சிக்கியது. விழுப்புரம் திரு.வி.க.சாலையில் தமிழ்நாடு அரசு பதிவுத்துறையின் இணை சார்பதிவாளர் அலுவலகம் எண்-2 இயங்கி வருகிறது. இங்கு விழுப்புரம் நகரம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பத்திரப்பதிவு செய்ய வருவார்கள். இதனால் இந்த அலுவலகத்தில் தினந்தோறும் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படும். நாள் ஒன்றுக்கு இந்த அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு பத்திரப்பதிவு நடைபெறும் என தெரிகிறது.


இந்நிலையில் இந்த அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம்  அங்குள்ள அதிகாரிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக லஞ்சப்பணம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விழுப்புரம்- கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதா, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை இதையடுத்து நேற்று இரவு 8.10 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சத்யராஜ் தலைமையில் ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் போலீசார், விழுப்புரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது அங்கு இணை சார்பதிவாளர் தையல்நாயகி உள்ளிட்ட அலுவலர்களும், ஊழியர்கள் சிலரும் இருந்தனர். அவர்களுடன் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் சிலரும் இருந்தனர்.


உடனே அவர்கள் யாரும் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லாதவாறு இருக்க அலுவலக முன்பக்க கதவுகளை உள்புறமாக தாழிட்டுக்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையை தொடங்கினர். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாகவும் மற்றும் அங்குள்ள பீரோக்களை திறந்து பார்த்தும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.


ஆவணங்களை கைப்பற்றி விசாரணை



அதுமட்டுமின்றி நேற்றுமுன்தினம் காலையில் இருந்து மாலை வரை யார், யார் பத்திரப்பதிவு செய்ய வந்துள்ளனர், எத்தனை பேர் வந்தனர், அவர்களில் எவ்வளவு பேருக்கு பத்திரப்பதிவு நடந்துள்ளது, அதற்காக வசூலிக்கப்பட்ட கட்டண விவரங்கள் என்ன? என்பது குறித்த விவரங்களை சேகரித்ததோடு அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றியும் விசாரணை நடத்தினர்.


மேலும் அங்கிருந்த இணை சார்பதிவாளர் தையல்நாயகி உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த அதிரடி சோதனை இரவு 10.30 மணியளவில் முடிந்தது.


கணக்கில் வராத பணம் சிக்கியது


இந்த சோதனையின்போது அலுவலகத்தில் இருந்து கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் எண்ணிப்பார்த்தபோது ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது. இந்த பணத்திற்கு அங்கிருந்த அதிகாரிகளால் உரிய கணக்கு காட்ட முடியாததால் கணக்கில் வராத அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அவற்றுடன் சோதனையை முடித்துக்கொண்டு வெளியே வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர்.


விழுப்புரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இரவு வரை பரபரப்பாக இயங்கிய அலுவலகம்


விழுப்புரம் இணை சார்பதிவாளர் அலுவலகம் கடந்த சில மாதங்களாகவே இரவு 8 மணி வரை இயங்கியுள்ளது. சில சமயங்களில் இரவு 9 மணிக்கெல்லாம் இயங்கியதாக கூறப்படுகிறது. பொதுவாக அரசு அலுவலகங்களை மாலை 6 மணிக்கெல்லாம் பூட்டிவிட்டு அலுவலர்கள் செல்வார்கள். இரவு வரை இயங்கியதாலும், இங்கு பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் கடந்த சில வாரங்களாக இந்த அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் நேற்று திடீரென அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த செல்லும்போது இரவு 8.10 மணி. அப்போதுகூட அலுவலர்கள், ஊழியர்களுடன் இணை சார்பதிவாளர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது