அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள்
அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் பொன்முடி தலைமையில் சக மனிதர்களை சாதியின் பேரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி,
வாழ்நாளெல்லாம் மக்களின் உரிமைகளை காக்க பாடுபட்டவர் அம்பேத்கர். அவர் வகுத்து தந்த அரசியலமைப்பு சட்டம் தான் வேறுபாடுகள் இல்லாத சமூகம் கட்டமைக்க அடித்தளமிட்டது. அதனைப் பேணி காக்க அனைவரும் பாடுபடுவோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் சமத்துவத்திற்காக, சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர். அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அனைவரும் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மாபெரும் தலைவர். அவருடைய பிறந்தநாளை நம்முடைய தமிழக முதலமைச்சர் சமத்துவ நாள் உறுதிமொழியாகயோடு கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி இன்று நாம் அவருடைய பிறந்த நாளில் சமத்துவம் நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளோம். இது வெறும் வாய்மொழி வார்த்தையாக இல்லாமல் செயல்படுத்துவோம் எனக் கூறினார். இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி எம்பி கௌதம சிகாமணி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாசிச கும்பலிடம் இருந்து நாட்டை மீட்போம் அரசியலமைப்புச் சட்டத்தை காப்போம் - து. ரவிக்குமார்
இன்றைய நாளில் புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு முன்பாக நின்று பாசிச கும்பிலிடமிருந்து நாட்டை மீட்போம், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம். இன்றைக்கு வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு அரசியலமைப்புச் சட்டத்துக்கு மிகப்பெரிய ஆபத்து நேர்ந்திருக்கிறது.
அதனுடைய சமத்துவ கோட்பாட்டை அழிப்பதற்காக பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. அந்த சதி முயற்சியை முறியடிப்பதும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவாக இருக்கும் சமத்துவ கோட்பாட்டை பாதுகாப்பதும் தலையாய கடமையாகும். இதை மும்மொழிந்து விடுதலைச் சிறுத்தைகள் உறுதி ஏற்று இருக்கின்றோம் எனக் கூறினார்.