விழுப்புரத்தில் தங்கம் கிராம் 6700க்கு விற்பனையானாலும் விலையை பற்றி கவலைபடாமல் அட்சய திருதியை நாளான இன்று தங்க நகைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் தங்க நகைகடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதின.
அட்சய திருதியை நாளில் நகை, மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றை வாங்கி வீட்டில் வைத்தால் வாழ்வில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். எனவே இந்நாளில் பெரும்பாலான மக்கள் தங்கம், வெள்ளி வைர நகைகளை வாங்குவர். அதன்படி இந்த வருட அட்சய திருதியை நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பெரும்பாலான மக்கள் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுவாக நகைகள் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வமே தனி தான். தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என விதவிதமாக ஆபரணங்கள் வாங்குவார்கள். இதனால் நகைக்கடைகள் எப்போதும் வாடிக்கையாளர்களால் நிரம்பும். அதேசமயம் மற்ற நாட்களை காட்டிலும் அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க மக்கள் போட்டி போடுவார்கள். அதற்கு காரணம் இந்த நன்னாளில் நாம் ஆபரணங்கள் வாங்கினால் அது ஆண்டு முழுவதும் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
அதன்படி 2024 ஆம் ஆண்டு அட்சய திரிதியை நாள் இன்று (மே 10) அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை (மே 11) மதியம் 2.50 மணி வரை உள்ளது. அதேசமயம் இந்த இரு நாட்களிலும் நகைகள் வாங்க நல்ல நேரம் காலை 5.45 மணி முதல் மதியம் 12.06 வரை குறிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நகைகள் வாங்க முடியாதவர்கள் இந்த நாளின் பிற நேரங்களில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் தங்கத்தின் சேமிப்பு அதிகரிக்கும் என்றும் அள்ள அள்ள குறையாது என்ற நம்பிக்கை மக்கள் இடையே இருந்து வருகிறது. அட்சய திருதியை நாளினை முன்னிட்டு விழுப்புரம் நேருஜி, காமராஜர் வீதியிலுள்ள தங்க நகைகடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அட்சய திருதி நாளான இன்று விழுப்புரத்தில் உள்ள நகைகடைகளில் மக்கள் நகைகளை வாங்க அதிகளவு ஆர்வம் காட்டி நகைகளை வாங்கி சென்றனர். இன்றைய தினம் அதிகமானோர் நகைகளை வாங்க வருகை புரிவதால் முன்னேற்பாடுகள் செய்யபட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று ஒருகிராம் தங்கத்தின் விலை 6700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாலும் ஒரு கிராம் தங்க நகையாவது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மக்கள் விலையை பற்றி கவலைபடாமல் தங்க நகைகளை வாங்கி சென்றனர்.