நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின், புதிய அனல் மின் நிலையத்தின், இரண்டாவது அலகில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், உயிரிழந்த திருநாவுக்கரசு குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு, நிரந்தர வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் மற்றும் படுகாயம் அடைந்த அனைவருக்கும் உரிய இழப்பீடும், உயர்தர சிகிச்சையும், அளிக்கப்பட வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நெய்வேலி என்.எல்.சி புதிய அனல் மின் நிலையத்தின், (NNTP-NEYVELI NEW THERMAL POWER STATION), இரண்டாவது அலகில் 22.12.2022 பிற்பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சிவசுப்பிரமணியன் மகனான திருநாவுக்கரசு, (வயது 45) என்ற இன்கோசர்வ் தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.
மேலும் நடைபெற்ற விபத்தில், படுகாயமடைந்து சென்னை தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ள, செல்வராஜ், சுரேஷ், தட்சிணாமூர்த்தி, செந்தில்குமார் ஆகியோருக்கு, உயர்தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
நெய்வேலி என்எல்சி நிர்வாகம், தொழிலாளர்களை, பாதுகாக்காமல் இருக்கும் காரணமாக, இந்த விலைமதிப்பற்ற உயிரின் இழப்பிற்கும், இந்த விபத்திற்கும், என்எல்சியே பொறுப்பேற்க வேண்டும் என்றும், விபத்துக்கு காரணமானவர்கள் மீது, குற்ற வழக்கு பதிவுசெய்து, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.கடந்த 2020 ஆம் ஆண்டு, இரண்டாவது அனல் நிலையத்தில், அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு விபத்துகளில், ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள், என 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அப்போது, நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின், சேர்மன் திரு ராகேஷ் குமார், இனிவரும் காலங்களில், இது போல் விபத்து நடக்காது என்று, உயிரிழந்த குடும்பத்தினரிடம் கைகூப்பி, மன்னிப்பு கேட்டது அனைவரும் அறிந்ததே.
தற்போது ஒன்றரை வருடத்தில், மூன்றாவது முறையாக, விபத்து ஏற்பட்டு உள்ளது என்பது, தொழிலாளர்களின் உயிர்களின் மீது அக்கறை இல்லாமலும், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும், என்எல்சி நிறுவனம் இருப்பது அலட்சியத்தின் உச்சமாக தெரிகிறது. இந்த விபத்துக்கும், மன்னிப்பு கேட்கப் போகிறாரா? என்எல்சி சேர்மன். வருடம் தோறும், கோடிக்கணக்கில் லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் தான், என்எல்சி நிர்வாகம் செயல்படுகிறதா??
நிலம் மற்றும் வீடு கொடுத்து, வாழ்வாதாரத்தை இழந்து, சொற்ப சம்பளத்திற்காக, வேலை செய்யும் தொழிலாளர்கள் மீது, எவ்வித அக்கறையும், ஏன்?., நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் எடுத்துக் கொள்வதில்லை? NNTP என்று சொல்லக்கூடிய புதிய அனல் மின் நிலையத்தில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அதிக தொழில்நுட்ப வசதியுடன், தொடங்கப்பட்டுள்ளது என என்எல்சி நிர்வாகம் தம்பட்டம் அடித்துக் கொண்டது.
ஆனால் தமிழர்களை நம்பாமல், வடமாநில தொழிலாளர்களையும், தனியார் நிறுவனத்தையும் கொண்டு, உருவாக்கப்பட்ட புதிய அனல் மின் நிலையத்தில், தற்போது விபத்து ஏற்பட்டுள்ளதற்கு நெய்வேலி என்எல்சி நிர்வாகம் என்ன? பதில் சொல்லப் போகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, நடந்த விபத்தில், 20 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தின் போது, அவர்களின் குடும்பத்திற்கு, சொற்பத் தொகையும், வேலையும் வழங்கிய என்எல்சி நிர்வாகம், தற்போது அதிக தொழில்நுட்ப வசதியுடன் கூடிய, புதிய அனல் மின் நிலையத்தில், பணியில் இருந்த தொழிலாளிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது, மற்றும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு என்ன செய்யப் போகிறது இந்த என்எல்சி நிர்வாகம்?.
மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி நிறுவனம், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுகிறதா? இல்லையா? என சந்தேகம் ஏற்படுகிறது.
சாதாரண வெல்டிங் கடை நடத்துபவர் கூட, தீயணைப்பு தடுப்ப சாதனங்கள், பாதுகாப்பு உடைகள், கையுறைகள், என அனைத்தையும், வைத்துக் கொண்டு வேலை செய்யும்போது, நவரத்தினா அந்தஸ்து என்ற பெயரில், மின்சார உற்பத்தியில், பெரும் லாபத்தோடு இயங்கும் நிறுவனமாக, திகழக்கூடிய நெய்வேலி என்எல்சி நிர்வாகம், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என, கடந்த இரண்டு சமபவங்களும், தற்போது அரங்கேரியுள்ள, மூன்றாவது சம்பவத்தின், மூலமாக வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
எனவே, என்எல்சி நிர்வாகம் உடனடியாக, உயிரிழந்த திருநாவுக்கரசு குடும்பத்தினருக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரது வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டும் என்றும், உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு தொழிலாளிகளுக்கும், தலா 50 லட்சம் நிவாரணமும், தீக்காயத்தால் தொடர்ந்து பணி செய்ய இயலாத பட்சத்தில், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும், வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
அதுமட்டுமில்லாமல், தொடர்ச்சியாக நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில், ஏற்படும் விபத்துகளில் உயர்மட்ட அதிகாரிகள், தங்களது அதிகார பலத்தால், தப்பித்துக் கொண்டு வருகின்றனர். எனவே தற்போது ஏற்பட்டுள்ள இந்த பயங்கர தீவிபத்து நடைபெற்ற, இடத்தில் பணிபுரிந்த, என்எல்சி உயர் அதிகாரிகள் மீது, வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனிவரும் காலங்களில் இது போல், விபத்துக்கள் நடக்காமல் இருக்கும். தொடர்ந்து என்எல்சி நிர்வாகம், தொழிலாளர்களின் உயிருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உறுதியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.