கடலூரில் அதிமுக கோஷ்டி மோதல் எதிரொலி, காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற விண்ணப்ப படிவம் பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது
அதிமுக இரண்டாம் கட்ட உட்கட்சிதேர்தலுக்கான விண்ணப்ப படிவம் பெரும் நிகழ்வு நேற்றும் இன்றும் நடைபெறுகிறது, அதிமுக கடலூர் மாவட்டத்தில் 4 மாவட்டங்களாக கடலூர் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என பிரிக்கப்பட்டு நான்கு மாவட்டங்களிலும் அதிமுக உட்கட்சிதேர்தல் நடைபெறும் நிலையில், கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஐந்து இடங்களில் உட்கட்சிதேர்தல் நடைபெறுகிறது.
இதில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தலைமையில் கடலூர் பாதிரிகுப்பம் பகுதியில் அமைந்து உள்ள கட்சி அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ள கழக அமைப்புச் செயலாளர் ஆசை மணி, மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் விண்ணப்ப படிவங்களை பெற்று சென்றனர்.
அதேபோல கடலூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கடலூர் திருவந்திபுரம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக உட்கட்சிதேர்தலுக்கான விண்ணப்ப படிவம் பெரும் நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர் சொரத்தூர்.இரா ராஜேந்திரன் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ் முன்னிலையில் விண்ணப்ப படிவங்களை பெற்று சென்றனர். தற்பொழுது நடைபெற உள்ள அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஏராளமான கடலூர் மாவட்ட கழக நிர்வாகிகள் அதிக அளவில் விண்ணப்ப மனுக்களை பெற்று சென்றதாக கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை நடைபெற்ற பாதிரிகுப்பம் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடந்த விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் அவர்களின் ஆதரவாளர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து திடீரென மோதி கொண்டனர். இதில் கடலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் குமார் தலைமையில் பத்து நபர்களும், நகர துணைச் செயலாளர் கந்தன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டவர்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர், மேலும் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இந்த கோஷ்டி மோதலில் இருதரப்பிலும் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இரண்டு தரப்பிலும் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, பின்னர் அந்த புகாரின் அடிப்படையில் இரண்டு தரப்பில் இருந்தும் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்த திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் ஒரு தரப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர். இதன் காரணமாக நேற்றும், இன்றும் நடைபெறும் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் பெரும் நிகழ்ச்சியில் பாதிரிக்குப்பம் அதிமுக கட்சி அலுவலகத்தில் பெரும் அளவு காவல் துறையினர் பாதுகாப்புடன் விண்ணப்ப படிவம் பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.