விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில், 35 நெடுஞ்சாலை உணவகங்கள் உள்ளன. இதில், விக்கிரவாண்டி டோல்கேட்டில் இருந்து திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் வரை 7 உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்த அரசு அனுமதி வழங்கப்பட்டது.  இந்தநிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்து உணவகங்களில் நின்று செல்கின்றன. பேருந்தில் வரும் பயணிகள் உணவகத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்தாமல் சாலையோரத்தில் அசுத்தம் செய்கின்றனர். இதனால் வாகனத்தில் செல்வோருக்கு அறுவருப்பாக உள்ளது.


குறிப்பாக திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் வரை உள்ள உணவகங்களை கடக்கும் போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகனத்தில் செல்வோருக்கு முகம் சுளிக்கும் விதமாக உள்ளது. மேலும் இதன் மூலம் நோய் பரவும் அபயம் உள்ளது.


பயணவழி உணவகங்களில் உள்ள கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த கழிவறைகள் இலவசமாகத்தான் பயணிகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக  தொடர்ந்து பெரும்பாலான பயணவழி உணவகங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி பகுதியில் உள்ள பயணவழி உணவகம் தமிழக அரசு பயணவழி உணவகங்களில் கழிப்பறைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்பதை உறுதி செய்ய பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.


இந்த நிலையில், செய்தி எதிரொலியாக அதிகாரிகள் கூறுகையில், அணைத்து பயணவழி உணவகங்களையும் சோதனை செய்யப்படும் என்றும் கழிவறைக்கு வழி பதாகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தரமற்ற உணவு மற்றும் சுகாதாரம் இல்லாமல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த ஒரு வரமாக அணைத்து பயணவழி உணவகங்களில் சோதனை செய்துவருவதாக தெரிவித்துள்ளனர்.




தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் வழங்கியது தொடர்பான நடவடிக்கை :


கடந்த மாதம் விக்கிரவாண்டி அருகே சாலைகள் இருபுறமும் உள்ள வேல்ஸ் உணவகம் பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில் தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் வழங்கியது கண்டறியப்பட்டதன் அடிப்படையில், வேல்ஸ் உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் உரிமம் ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.


இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமீப காலமாக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது மற்றும் சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள் பராமரிக்கப்படுவது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கருக்கு வரப்பெற்ற புகாரின் அடிப்படையில், அமைச்சரின் உத்தரவின்படி சாலையோர உணவகங்களின் செயல்பாட்டினை கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்களால், தீடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


ஜனவரி 19-ம் தேதியன்று போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் தீடீர் ஆய்வு மேற்கொள்ளும் போது, விக்கிரவாண்டி அருகே சாலைகள் இருபுறமும் உள்ள வேல்ஸ் உணவகம் பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில் தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் வழங்கியதை கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில், வேல்ஸ் உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில், அங்கீகரிக்கப்பட்ட சாலையோர பிற உணவகங்களும் ஆய்வு செய்யப்பட்டு, குறைகள் கண்டறியப்பட்டால், அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.