விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், மகளிர் குழுக்கள், மீனவர்களுடன் கலந்தாய்வில் ஈடுபட்டுள்ளார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மூன்று மாவட்ட ஆட்சியர்களான ஷரவன் குமார், பாலசுப்பிரமணியம், பழனி தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கு பெற்றனர் .
முதலமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள், சிறு,குறு தொழிலாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் :-
(நந்தன் கால்வாய் திட்டம் )
பாசன விவசாயிகள் சங்க செயலாளர் அன்னியூர் சிவா:-
சாத்தனூர் அணையின் உபரி நீரை ஊட்டு கால்வாய் மூலம் 16 கிலோமீட்டர் அமைத்து நந்தன் கால்வாயுடன் இணைத்தால் 36 ஏரிகள், 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலமும், வாதானூர் வாய்க்காலில் உள்ள ஏரிகள், 1,750 ஏக்கர் விவசாய நிலமும், பனமலை ஏரியின் இடதுபுறம் 32 கிலோ மீட்டரில் கல்லேரி ஏரிக்கு நீர் வெளியேற்றும் கருவி வழியாக தண்ணீரை திருப்பினால் 10 ஏரிகள் மூலம் 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன பெறும். ஆக மொத்தம் 10,750 ஏக்கர் விவசாய நிலங்கள் சாகுபடி செய்யலாம். இந்த திட்டத்தால் திருவண்ணாமலை, விக்கிரவாண்டி, கீழ்பெண்ணாத்தூர், செஞ்சி, விழுப்புரம், மயிலம் ஆகிய 6 தொகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள். இத்திட்டம் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு மேல் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. எனவே தங்களின் பொற்கால ஆட்சியில் இத்திட்டம் நிறைவேறும் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தலைவர் கலிவரதன்:-
தென்பெண்ணையாற்றில் தளவானூர் அணைக்கட்டை உடனடியாக சீர்செய்ய வேண்டும். 5 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் போன்று கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை ஜாமீன் இல்லாமல் கடன் வழங்க வேண்டும். செயற்கை உர பயன்பாட்டை தடுக்க பசுந்தாள் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க விதை உற்பத்தி மண்டலமாக விழுப்புரம் மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். பனிப்பயிர் (காராமணி) புவிசார் குறியீடு அறிவிக்க வேண்டும். நஞ்சை, புஞ்சை 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளை சிறு விவசாயிகள் என அறிவிக்க வேண்டும்.
விழுப்புரம் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் ராமகிருஷ்ணன்:-
ஜி.எஸ்.டி. வரியால் ஏராளமான வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பலரும் நஷ்டம் அடைந்தனர். ஜி.எஸ்.டி. வரி கொண்டு வரும்போது ஆரம்பத்திலேயே சமரச திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை சமரச திட்டத்தை அமல்படுத்தவில்லை. எனவே ஜி.எஸ்.டி.யில் சமரச திட்டத்தை அமல்படுத்துமாறு மீண்டும் வலியுறுத்துகிறோம். விழுப்புரம் நகரில் உள்ள பழைய அரசு மருத்துவமனை முன்பு செயல்பட்டதைபோன்று மீண்டும் சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும். விழுப்புரம் நகரில் நடைபாதை வியாபாரிகளுக்கென்று தனியாக இடம் ஒதுக்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கள்ளக்குறிச்சி அரிசி ஆலை சங்க நிர்வாகி சுலைமான்:-
அரிசி ஆலை உற்பத்தி தொழிலில் மாசு கட்டுப்பாட்டு துறையிடமிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். அரிசி ஆலை தொழிலுக்கென்று தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும். மீன்வளம், கால்நடை துறை போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் இருக்கிற நிலையில் அரிசி ஆலை சம்பந்தமாக எந்தவொரு படிப்புகளும் இல்லை. ஆகவே கல்வி நிறுவனங்களில் அரிசி ஆலை சம்பந்தமான படிப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகி முருகன்:-
நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 அறிவிக்க வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் பட்டா மாற்றம் தொடர்பாக 6 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் உள்ளது. அதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
திண்டிவனம்- நகரி ரெயில்வே பாதை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தியதற்கு உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும். சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.2 கோடியே 75 லட்சம் அளவிற்கு விவசாயிகளின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. உரிய முறையில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு அந்த பணத்தை பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். நந்தன கால்வாய் திட்டத்தில் புனரமைப்பு பணிக்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
செஞ்சி அருகே அணையேரியை சேர்ந்த விவசாயி ரவி:-
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் மூட்டைகள் வைக்க போதிய இடம் இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீரில் நனைந்து வீணாகிறது. எனவே மேற்கூரை வசதி ஏற்படுத்த வேண்டும். செஞ்சி சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்ட வேண்டும். சிறுதானிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தனியாக கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு சிறு, குறு தொழில் சங்க துணைத்தலைவர் வாசுதேவன்:-
திண்டிவனத்தில் சிப்காட் அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தோம். இதன் மூலம் நிறைய தொழிலகங்கள் வந்துள்ளன. ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழிலாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் நலன் கருதி தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை அமைக்க வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.
கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவீந்திரன்:-
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி லாபம் ஈட்டுகிறது. இதில் சமூகப் பொறுப்புணர்வு திட்ட நிதியை வெளிமாநிலங்களுக்குத்தான் அதிகம் செலவிடுகிறது. கடலூர் மாவட்டத்துக்கு வெறும் 2 சதவீதம் மட்டும் செலவிடுகிறது. கடலூர் மாவட்டத்துக்கு மட்டும் சமுகப்பொறுப்புணர்வு நிதியில் ரூ.100 கோடி செலவிட வேண்டும்.
விழுப்புரம் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மணி:-
மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க சட்டமன்றத்தில் தனி தீர்மானம் இயற்ற வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கி வாழும் எங்கள் மீனவ மக்களுக்கு மீன்பிடி துறைமுகம் அமைத்துத்தர பரிந்துரை செய்ய வேண்டும். மீன்பிடி தடை காலத்தில் கொடுக்கப்படும் ரூ.6 ஆயிரத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கோட்டக்குப்பம் நகராட்சி கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் வாழும் மீனவர்களுக்கு கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைத்துத்தர வேண்டும்.
திண்டிவனம் கடவம்பாக்கத்தை சேர்ந்த விவசாயி மணி:-
திண்டிவனம், செஞ்சியில் நெல் சுத்திகரிப்பு நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதுபோல் விவசாயிகளுக்கும் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். திண்டிவனத்தில் மூடப்பட்ட சுப்பிரமணியம் வேளாண் பட்டய கல்லூரியை மீண்டும் திறக்க வேண்டும். திண்டிவனம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க விழுப்புரம் மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி:-
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், கரும்பு ஆலைகளுக்கு வெட்டி ஏற்றும் கரும்புக்கு உடனடியாக தொகை வழங்காமல் காலதாமதம் செய்கிறார்கள். எனவே உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் கஷ்டத்தை போக்க கரும்பு வெட்டும் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போட்ட தமிழக அரசு, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
.......