இந்தியாவின் 75 சுதந்திர தின விழாவையொட்டி செஞ்சிக்கோட்டையை வரும் 15ம் தேதி வரை பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாக பார்வையிடலாம் என தொல்லியியல் துறை அறிவித்துள்ளது. விழுப்புரத்திற்கே அடையாளமாக விளங்கும் செஞ்சிக் கோட்டை. இதை பார்க்க ஏராளமான வெளிநாடு, வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று வரை செஞ்சிக்கோட்டையின் கட்டட அமைப்பும் அதன் உருவாக்கமும் காண்போரையும் வரலாற்று ஆசியர்களையும் ஒரு நிமிடம் திக்கு முக்காட வைக்கிறது. மேலும், உலகின் முக்கிய அடையாள சின்னமாகவும் விளங்குகிறது இந்த கோட்டை இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை பொதுமக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம் என மத்திய அரசு அறிவித்தது.


இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற செஞ்சிக்கோட்டையைப் பார்வையிட வியாழக்கிழமை ஆகஸ்ட் 5 முதல் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இலவசம் என தொல்லியியல் துறை அறிவித்தது. சுதந்திர தின விழாவையொட்டி, செஞ்சிக்கோட்டையின் மதில் சுவா் 150 மீட்டா் நீளத்துக்கு தேசியக் கொடியின் மூவா்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. (இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது.




இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்தது முக்கோண வடிவமாக அமைந்துள்ளது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. செஞ்சிக்கோட்டையை பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன. செஞ்சியின் இரண்டு நூற்றாண்டுகள் வரலாற்றை கூறும் மெக்கன்சி சுவடித்தொகுப்புகளில் இது தொடர்பான பல தகவல்கள் உள்ளன. செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.




கீழ்க் கோட்டைக்கு செல்ல இரண்டு வாயில்கள் உள்ளன. அதில் வடக்கில் உள்ள வாயில் வேலூர் வாயில் என்றும், கிழக்கில் உள்ளது பாண்டிச்சேரி வாயில் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டில் எதன் வழியாக சென்றாலும் 24 அடி அகலமும், 60 அடி ஆழமும் கொண்ட ஒரு கணவாயைத் தாண்டிச் செல்லவேண்டும். செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் கோட்டைச் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இதில் எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டுள்ளது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் உள்ளது.


இக்கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி அல்லது ராணிக்கோட்டை, சக்கிலிதுர்கம் அல்லது சந்திரகிரி, ராஜகிரி ஆகிய குன்றுகள் உள்ளன. இந்த குன்றுகளை இணைக்கும் விதமாக இவற்றுக்கு இடையில் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட கீழ்க்கோட்டைச்யானது கட்டபட்டுள்ளது. இந்தக் கீழ் கோட்டையில் ஒரு பள்ளிவாசல், வெங்கட்ரமணசாமி கோவில் போன்றவை உள்ளன. இராஜகிரியின் உச்சியில் அரங்கநாதர் கோயில் கட்டபட்டுள்ளது. இராஜகிரியில் போர் முற்றுகைக்காலத்தில் எதிரிகள் உள்ளே நுழையாதவாறு தடுக்கும் இழுவைப்பாலம் உள்ளது, போர்காலத்தில் கோட்டைக் காவலர்கள் இந்த பாலத்தை அகற்றிவிடுவர் அப்போது எதிகள் உள்ளே நுழைய இயலாமல் திண்டாடுவர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண