தமிழகத்தில் கொரோனா 3 ஆவது அலை பரவாமல் தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசியினை மக்களிடம் விரைவாக எடுத்து செல்வதற்கு மெகா சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் நான்கு வாரங்களாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் நடைபெற்றது, இதில் மக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி முகாமை துரிதப்படுத்த, மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விடுபட்ட தகுதியானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு வாரங்களாக காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகள், கிராம ஊராட்சி என பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் நடந்த நான்கு மெகா தடுப்பூசி முகாம்களில் மட்டும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 466 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 5-வது முறையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி முகாம்கள் நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் நடைபெறுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 909 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம். இந்த தடுப்பூசி முகாமினை கடலூர் மாவட்ட மக்கள் அனைவரும் பயன்படுத்தி விரைவாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.