விழுப்புரம்: ஆரோவில் அருகேயுள்ள பொம்மையார்பாளையத்தில் மஹதி என்பவரிடம் அரண்மனை கட்டி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 கோடியை மோசடி செய்த கட்டிட ஒப்பந்ததாரரை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் 5 கோடி ரூபாய் கட்டுமான மோசடி: ஒப்பந்ததாரர் கைது
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் பழைய ஆரோவில் தெருவை சேர்ந்தவர் டேனியல் பெல்நெக் மனைவி மஹதியும் (வயது 69). அவரது கணவரும் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் மஹதி, பொம்மையார் பாளையத்தில் தனக்கு சொந்தமாக உள்ள இடத்தில் அரண்மனை கட்டுவதற்காக முடிவு செய்தார். இதற்காக அவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 2 நபர்கள் மூலம் கட்டிடம் கட்டியுள்ளார்.
வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் அரண்மனை
அதன் பிறகு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் சித்தார்த் (33) என்பவர் மூலம் எவ்வித உடன்படிக்கையும் போடாமல் மீதி கட்டிடத்தை கட்டியுள்ளார். அரண்மனை கட்டிடம் கட்ட இதுவரை மஹதி, 11 கோடியே 67 லட்சத்து 46 ஆயிரத்து 217-ஐ வங்கி பரிவர்த்தனை மூலம் சித்தார்த்திற்கு அனுப்பியுள்ளார். அதில் சித்தார்த்தின் வங்கி கணக்கிற்கு 1 கோடியே 72 லட்சத்து 96 ஆயிரத்து 932-ஐ அனுப்பி வைத்துள்ளார்.
ரூ.5 கோடி மோசடி
ஆனால் அவர், அந்த பணத்தில் வாங்கிய பல கட்டுமான பொருட்களை, மஹதிக்கு சொந்தமாக கட்டி வரும் அரண்மனை கட்டிடத்தில் பயன்படுத்தாமல் திருடியுள்ளார். சித்தார்த், கட்டுமான பொருட்களுக்காக ஆகியுள்ள செலவு என்று போலியான ரசீதுகளை மஹதியிடம் காண்பித்து அவரிடமிருந்து 5 கோடியை பெற்று ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.
குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை
இதுகுறித்து மஹதி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரனையில் சித்தார்த் மோசடி செய்தது தெரியவரபே சித்தார்த்தை போலீசார் கைது செய்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.