கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனது மனைவி, வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததை அறிந்த கணவர், மனைவி மற்றும் ஆண் நண்பரின் தலையை வெட்டிக் கொலை செய்தார். பின்னர், வெட்டப்பட்ட தலைகளைக் கொண்டு சென்று, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கள்ளக்காதல் காரணமாக இருவரை தலை துண்டித்து கொலை செய்த கணவன்
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தில், இருவருக்கிடையே நடைபெற்ற கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட கோபத்தில், கணவன் தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கொடூரமாக தலை துண்டித்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த இரு தலைகளையும் கட்டை பையில் வைத்துக் கொண்டு அவர் நேரடியாக வேலூர் மத்திய சிறைக்கு சென்று சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி (வயது 60), கூலி தொழிலாளி. இவர், தனது முதல் மனைவியை பிரிந்த பின் நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (வயது 40) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், லட்சுமிக்கு அதே ஊரை சேர்ந்த தங்கராசு (வயது 57) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் கணவர் கொளஞ்சிக்கு தெரியவந்ததும், அவர் இருவரையும் கண்டித்திருந்தார். இருப்பினும், இருவரும் அந்த உறவை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
கொடூர கொலை:
செப்டம்பர் 10ம் தேதி இரவு, வேலைக்காக வெளியே செல்கிறேன் என கூறிய கொளஞ்சி, உண்மையில் அருகே உள்ள இடத்தில் மறைந்திருந்தார். அதே இரவு, மனைவி லட்சுமி தங்கராசுவை மொபைல் மூலம் அழைத்து, வீட்டின் மொட்டைமாடிக்கு வரச் சொல்லியுள்ளார். இரவு அனைவரும் தூங்கிய பிறகு தங்கராசு வந்துள்ளார்.
அதைப் பார்த்த கொளஞ்சி, முன்கூட்டியே தயாராக கொண்டு வந்திருந்த கத்தியுடன் மொட்டைமாடிக்கு சென்று, இருவரையும் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர், அவர்களது தலைகளைக் துண்டித்துக் கொண்டு, பாலித்தீன் பையில் போட்டு, கட்டை பையில் வைத்து இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் வந்தார்.
அங்கிருந்து அரசு பேருந்தில் வேலூருக்குச் சென்ற அவர், நேராக வேலூர் மத்திய சிறைக்குச் சென்று காவலர்களிடம் அந்த இரு தலைகளையும் கொடுத்து, தானாகவே சரணடைந்தார்.
போலீசார் நடவடிக்கை:
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் கொளஞ்சியை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கொடூர சம்பவம், உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.