உளுந்தூர்பேட்டை அருகே  கொத்தடிமையாக இருளர் இன மக்கள்  வேலை பார்த்து வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த விழுப்புரம் பி.வி.ரமேஷ், வழக்கறிஞர் பிரிடா ஞானமணி ஆகியோர் கொத்தடிமையாக இருந்த இருளர் இனக் குடும்பத்தை மீட்க முயற்சி எடுத்தனர். மீட்கப்பட்ட இருளர் இன குடும்பத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ரூபாய் 5000/- நிவாரணம், அரிசி, காய்கறி, வேட்டி, சேலை, பாய், தலையணை மற்றும் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கியுள்ளார்.




 





இந்த நிலையில் இக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் தன் தாயிடம் கோபித்துக் கொண்டு ஆட்சியர் வழங்கிய ரூபாய் 5000 மற்றும் வீட்டில் இருந்த ரூ.2000 என மொத்தம் 7000 பணத்தோடு விருத்தாசலம் சென்று இரவில் சுற்றிக் கொண்டிருந்த போது கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி  அதிகாலை 2.45 மணிக்கு விருத்தாசலம் போலீசார் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், காலையில் அச்சிறுவனை விசாரித்த விருத்தாசலம் காவல்நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் அச்சிறுவன் இருளர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து கொண்ட பின் அவனை அடித்து உதைத்து சித்தரவதைச் செய்ததாக கூறப்படுகிறது. திருடியதாக ஒப்புக்கொள்ள சொல்லி அடித்து துன்புறுத்தியுள்ளனர்.


 



பின்னர் விருத்தாசலத்தில் உள்ள நான்குக் கடைகளில் பூட்டை உடைத்து தனித்தனியே ரூ.5000, ரூ.1000, ரூ.1000, ரூ.340 பணம் திருடியதாக பொய் வழக்குகள் (Cr.Nos. 1589/2021, 1590/2021, 1591/2021, 1592/2021 u/s 457, 380 IPC) போட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். அச்சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் 12 நாட்கள்  (28.12.2021 - 10.01.2022) இருந்து விட்டுப் பிணையில் வெளியே வந்துள்ளான்.




இது குறித்து பேராசிரியர் பிரபா. கல்விமணி எனும் கல்யாணி அச்சிறுவனின் ஊருக்கே சென்று விசாரித்துவிட்டு வந்து, அச்சிறுவன் மூலம் விரிவான புகார் ஒன்றை தமிழக காவல்துறை மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார். அதில் பழங்குடி இருளர் இனச் சிறுவன் பொய் வழக்குப் போட்ட விருத்தாசலம் காவல்நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கமல்காசன் மற்றும் காவலர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளார் இருளர், குறவர் இன மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.