விழுப்புரம் : திண்டிவனம் அருகே நாவல் பழம் பறிக்கச் சென்ற 3 குழந்தைகள் ஓடையில் மூழ்கி உயிரிழப்பு. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் சஞ்சய் (10), மாரிமுத்து என்பவரின் இரண்டு மகள்கள் பிரியதர்ஷினி (10) சுப்புலட்சுமி (8) ஆகிய மூன்று பேர் கோனேரிகுப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
வழக்கம்போல் இன்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் மாணவன் மாலை வகுப்பினை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று அங்கிருந்து நல்லாத்தூரிலிருந்து ஓங்கூர் செல்லும் ஓடையில் உள்ள நாவல் மரத்தில் நாவற்பழம் பரிக்க சென்றுள்ளனர்.
தற்போது பெய்து வரும் கனமழையால் ஓடையில் நீர் அதிக அளவில் செல்கிறது. நாவல் பழம் பறிக்கும் பொழுது எதிர்பாராத விதமாக தவறிவிழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்தபோது ஒரு குழந்தையின் பள்ளி சீருடை மட்டும் நீரில் மேலே தெரிந்துள்ளது. இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த அந்த நபர் ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலின் பேரில் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ளும்போது மூன்று குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாவல் பழம் பறிக்க சென்ற ஒரே குடும்பத்தை சார்ந்த அக்காள், தங்கை மற்றும் சிறுவன் என மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.