தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் புதுவை மாநிலத்தில் இருந்து மது பானங்கள் கடத்தப்படுகின்றதா என்பதை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  இந்த நிலையில் இன்று காலை சரக்கு வாகனம் ஒன்று புதுவையில் இருந்து கடலூருக்கு சந்தேகத்திர்க்கு இடமாக வேகமாக வந்த நிலையில் அதனை மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தினர், ஆனாலும் நிற்காமல் சென்ற அந்த வாகனத்தைத் துரத்திச் சென்று கடலூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தொட்டி என்ற இடத்தில் காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வாகனத்தில் இருந்த ஓட்டுநர் தப்பியோட முயன்றார், அப்பொழுது அவரை பிடித்து காவல் துறையினர் விசாரித்த போது வாகனத்தின் உள்ளே காலி பழ பெட்டிகள் உள்ளதாக கூறி உள்ளார் பின்னர் வாகனத்தை சோதனை செய்த காவல் துறையினர் காலி பழ பெட்டிகள் இடையே ஆங்கு ஆங்கே அட்டைப் பெட்டிகள் இருப்பதை கண்டு பிடித்தனர். 

 



 

 

பின்னர் அந்த அட்டைப் பெட்டிகளை திறந்து பார்த்த போது அதில் மது பாட்டில்கள் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது அந்த மது பாட்டில்களை ஆய்வு செய்த காவல் துறையினர் பழைய தமிழ்நாடு மதுபான பாட்டில்களில் போலி மது பானம் அடைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால், அந்த வாகனத்தை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவரை விசாரித்த போது இது கடலூர் வழியாக புதுக்கோட்டைக்கு தேர்தல் பணிக்காக கொண்டு செல்வதாக ஓட்டுநர் சரவணன் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 



 

மேலும், அந்த வாகனத்தில் மொத்தம் 50 பெட்டிகளில் 2400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள நிலையில் இதன் மதிப்பு சுமார் 3,50,000 இருக்கும் என கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் வரும் 19 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இவ்வாறு ஒரே வாகனத்தில் இவ்வளவு மதிப்பு உள்ள போலி மது பாட்டில்கள் தேர்தல் காரணமாக கடத்தப்படுகிறதா, அல்லது இல்லை என்றால் இது யாருக்காக செல்கிறது என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.