தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இந்த நிலையில் தெற்கு, கிழக்கு வங்க கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து புயல் சின்னமாக மாறியது. இதனால் விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங்கிய மழை விடிய, விடிய பரவலாக பெய்தது. இடையிடையே கன மழையாகவும் கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து நேற்று காலையிலும் இந்த மழை நீடித்தது .



இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழை காரணமாக பல ஆறுகளில் வெள்ள பெருக்கு  ஏற்பட்டுள்ளது. அதன் படி தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான மலட்டாற்றில் ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விழுப்புரம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் பெருமாள் , வெங்கடபதி மற்றும் சின்னமடம் கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் ஆகியோர்களுக்கு சொந்தமான 3 கோழி வளர்ப்பு மையத்தில் தண்ணீர் புகுந்ததது. இதனால் அங்கு வளர்க்கப்பட்டு வந்த 3 பேருக்கு சொந்தமான 15 ஆயிரம் கோழிகள் நீரில் மூழ்கி பலியாகின. இதனால் கோழி வளர்ப்பாளர்களுக்கு லட்சக்கணக்கில் பெருத்த நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதால் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.



மேலும் சின்னமடம் பகுதியில் ராமதாஸ் என்பவருடைய கோழிப் பண்ணைக்குள் வெள்ளம் புகுந்ததில் அங்கிருந்த 4 ஆயிரம் கோழிகளும் பலியாகின. இதனால் பெருமாள் உள்ளிட்ட 3 பேருக்கும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். அதே போல் திண்டிவனம் அடுத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் மகன் வேல்முருகன் (வயது 38) என்பவரின் கோழிப் பண்ணைக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த 3,500 கோழி குஞ்சுகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன.


இதுவரை 14 மாடுகள்,  1200 கோழிகள் மட்டுமே உயிரழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொண்டு கால்நடை உயிரிழப்புகளை கணக்கீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்