புதுச்சேரி: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வைத்து வருவதாகவும், மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளதாகவும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 13 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசினார். புதுச்சேரியில் கடந்த 2011 ஆம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கி 3 மாதத்தில் தனிப்பெரும்பான்மையுடம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவனத்தலைவரும், முதல்வருமான ரங்கசாமி கட்சியின் கொடியை ஏற்றிவைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர்…
புதுச்சேரியில் கடந்த கால காங்கிரஸ்,திமுக கூட்டணி ஆட்சியில் மக்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தவில்லை என்றும் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொருப்பெற்ற பிறகு மீண்டும் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். மேலும் ஆட்சி பொருப்பெற்ற பிறகு 26 ஆயிரம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்களுக்கான இலவச லேப்-டாப், சைக்கிள், சீருடை இந்த மாதம் வழங்கப்படும் என்றார் தொடர்ந்து பேசிய அவர் புதிய தொழிற்சாலைகளை தொடங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதேபோல் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதற்காக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதாகவும் ஆனால் முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி வரும் போது எல்லாம் மாநில அந்தஸ்து விவகாரத்தை கையில் எடுத்துக்கொள்வதாக எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருவதாக தெரிவித்த ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்காக மட்டும் மாநில அந்த்ஸ்து கேட்கவில்லை என்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினருக்காக மாநில அந்தஸ்து கோரி வருகிறோம் என்றாம் மேலும் நிர்வாக ரீதியாகவும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என்பது ஆட்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கோரி வருவதாகவும், மத்திய அரசு அதனை வழங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் உதவியோடு மாநில வருவாயை உயர்த்தி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும். என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வளர்ச்சி இருக்குமா என சிலர் நினைக்கலாம் ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஒரு சாமி (கடவுள்) கட்சி என்பதால் நல்ல வளர்ச்சியை காணும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.