வேலூரில் மத்திய அரசு அறிவித்த "அக்னி பத்" திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், ராணுவ உடற்தகுதி தேர்வில் தேர்வானவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தக் கோரியும் வேலூரில் இளைஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள ’அக்னி பாத்’ திட்டத்தை ரத்து செய்யக் கோரி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தேசியக் கொடியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எழுத்துத்தேர்வு கோரி போராட்டம்
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய ராணுவத்துக்காக ஆள்களை சேர்க்க திருவண்ணாமலையில் நடைபெற்ற உடற் தகுதி தேர்வில் இவர்கள் தேர்வானவர்களுக்கு, கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை கரோனாவை காரணம் காட்டி எழுத்து தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் ராணுவத்துக்கு செல்ல ஆர்வமுள்ள இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் ஆகவே நிலுவையில் உள்ள எழுத்து தேர்வை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை விடுத்தும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இவர்களிடம் காவல் துறையினர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இளைஞர்கள் கலைந்து சென்றனர்.எனினும் தாங்கள் அடுத்தடுத்த கட்டங்களாக தொடர் போராங்களில் ஈடுபட இருப்பதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலூரில் இருந்து ராணுவத்துக்கு செல்வோர் அதிகம்
தமிழ்நாட்டில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தே ராணுவப் பணியில் ஈடுபட அதிக நபர்கள் ஆர்வத்துடன் செல்கின்றனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இதுகுறித்து கூறுகையில், ராணுவத்தில் சேர்வதை நாங்கள் பணியாக பார்க்கவில்லை எங்கள் கனவு அது அதை பறிக்க பார்க்கிறார்கள். ’அக்னி பத்’ மூலம் நான்கு ஆண்டுக்கு மட்டும் ஆள் எடுத்துவிட்டு பின்னர் வெளியேற்றினார்.
நாங்கள் வயதைத் தொலைத்து விட்டு என்ன செய்வது? இந்த ’அக்னி பத்’ திட்டம் ராணுவ அலுவலக பணிக்கு செல்வோருக்கு பொருந்தாது. இதிலும் பாகுபாடு பார்க்கப்படுகிறது. 2019இல் நடந்த உடல் தகுதி தேர்வு முடித்து இப்போது வரை காத்துக்கொண்டுள்ளோம். பலபேருக்கு வயது கடந்துவிட்டது.
அரசு மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
இதனால் சிலர் உயிரிழந்தும் உள்ளார்கள். ஆகவே அரசு இவற்றை மறு பரிசீலனை செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு முதல் நடத்தப்படாமல் உள்ள தேர்வை விரைந்து நடத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் முப்படைகளிலும் ராணுவ வீரர்களை சேர்ப்பதற்காக ’அக்னிபாத்’ என்ற திட்டத்தை மத்திய அரசு நேற்று முன் தினம் (ஜூன்.14) அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி பணியமர்த்தப்படுபவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவர் என்றும், 4 ஆண்டுகளுக்கு மட்டுமே இவர்கள் ராணுவத்தில் பணியாற்ற முடியும் என்றும், பின்னர் அவர்களுக்கு 11 முதல் 12 லட்சம் ரூபாய் வரை தொகை அளிக்கப்பட்டு பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் புதிய ராணுவ திட்டம், அளிக்க வேண்டிய ஊதியத்தையும் ஓய்வூதியத்தையும் பெரிய அளவு குறைக்கவுள்ளது என்றும், இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு ஆயுத தளவாடங்கள் வாங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் வன்முறை
இந்நிலையில், மத்திய அரசின் இந்த அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, பீகார் மாநிலத்தில் இளைஞர்களும் மாணவர்களும் இத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பீகார் இளைஞர்கள் நேற்றும் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது.