திருவண்ணாமலை பாஜகவின் எட்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா திருவண்ணாமலைக்கு வருகை தந்தார். 


பொதுக்கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “ஆன்மீக மக்கள் கிரிவலம் வரக் கூடிய கிரிவலப்பாதையில் நாத்திகரான கருணாநிதிக்கு ஏன் சிலை வைக்கவேண்டும். இது சரியானது அல்ல. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடரப்போகிறேன். பக்தர்கள் காணிக்கையாக அளித்த கோவில் நகைகளை திமுக அரசு உருக்குவது திருடுவதற்கு சமம் எனவும் அந்த திட்டத்தை கைவிட வேண்டுமென பாஜக கட்சி கண்டித்து வருகிறது” என்றார்.




”கடந்த 8 ஆண்டுகளாக யாரும் நிறைவேற்றாத, நிறைவேற்ற முடியாது என்று கருதுகின்ற விஷயங்கள் பா.ஜ.க. அரசினால் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் வெளிநாட்டில் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டது. ஆனால் கொரோனாவிற்கு மத்திய அரசு தடுப்பூசி கண்டுபிடித்து 200 கோடி மக்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. இதேபோல் பல்வேறு திட்டங்களில் பிரதமர் மோடியின் அரசு முன்மாதிரியான அரசாங்கமாக செயல்பட்டு வருகின்றது.


உக்ரைன் நாட்டில் இருந்து 10 ஆயிரத்து 300 மாணவர்களை ஒரு கீறல் கூட இல்லாமல் மீட்டு வந்து உள்ளோம் என்று தமிழக முதலமைச்சர் சொல்கிறார். இது ஒரு பொய்யான தகவல் என்றார். ஏனென்றால் 4 மந்திரிகளை அண்டை நாடுகளில் அமர்த்தி தமிழ்நாடு சேர்ந்த உள்பட 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களை மத்திய அரசு அழைத்து வந்து உள்ளது. தமிழக அரசில் ஊழல் மட்டுமே நடைபெற்று வருகின்றது. ஊழல் நடக்கும்போதே எங்கள் மாநில தலைவர் உடனடியாக பிடித்து விடுவதால் தமிழக அரசாங்கம் உடனடியாக பின்வாங்கி முடிவை மாற்றி வருகின்றது.




தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஊழல் மையங்களாக மாறி வருகிறது. அதிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த நிலையங்களில் நெல் விதைக்காதவனும் நெல் விற்பனை செய்ய வருகின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் செய்யப்பட்டு உள்ளது. இங்கு ஒவ்வொரு விவசாயியும் வஞ்சிக்கப்படுகிறார். இது வரை தமிழகத்தில் 7 லாக்கப் மரணங்கள் நடந்து உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும் பாஜக பிரமுகர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதை தவிர்த்து விட்டு தமிழக காவல் துறை இயக்குனர் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்” திருவண்ணாமலையில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பேட்டியளித்தார்.