தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தினை ரத்து செய்தததால், மாற்று பணி வழங்க வலியுறுத்தி, 25 ஆண்டுகள் பணியாற்றிய, பணியாளர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் 1996 ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை மீட்டு பயிற்சி கொடுத்து அவர்கள் முறை சார்ந்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த 25 ஆண்டுகளாக கீழ் எழுத்தர், ஆவண காப்பாளர், கல்வி பயிற்றுனர், தொழில்கல்வி பயிற்றுநர், மைய உதவியாளர்கள் என 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த 25 ஆண்டுகளில் 17,126 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, கல்வி மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டு இதில் 12846 சிறார்கள் முறைசார்ந்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



இவ்வாறு படித்த மாணவர்கள் தற்பொழுது மருத்துவம், பொறியியல், காவல் துறை, வழக்கறிஞர் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய அரசு தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தினை நிறுத்தியது. அதனை தற்போது சர்வ சிக்ச அபியான் திட்டத்துடன் இணைத்துள்ளது. இதனால் கடந்த 25 ஆண்டுகளாக தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் பணியாற்றி வந்த பணியாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் இந்தத் திட்டத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர். ஆனால் இவர்களது கோரிக்கைக்கு, அரசு இன்று வரை செவிசாய்க்கவில்லை.


இந்நிலையில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கல்வி அனுபவம் உள்ளதால், எஸ்எஸ்ஏ திட்டத்தினல் பணி வழங்கிட வேண்டும் அல்லது சத்துணவு திட்டத்தில் பணி அனுபவம் உள்ளதால் சத்துணவு திட்டத்தில் பணி வழங்கிட வேண்டும் மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் பணி அனுபவம் உள்ளதால் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பணி வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரிகம் மனு கொடுத்தனர். மேலும் கடந்த 25 ஆண்டுகளாக இந்த திட்டத்தில், குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதால், இதில் பணியாற்றிய பணியாளர்களுக்கு வயது மூப்பு ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு தமிழக அரசு மாற்று பணி வழங்கியோ அல்லது வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கி தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண