திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மகளிர் திட்டத்தின் மூலம் 2,181 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 26,172 உறுப்பினர்களுக்கு ரூ.30.22 கோடி மதிப்பிலான வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார், விழாவில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் ஒன்றிய குழு தலைவர்கள் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மகளிர் சுய உதவி குழுவினரின் தேன் உற்பத்தி மற்றும் சிறுதானிய உற்பத்தி கண்காட்சியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கி வைத்ததன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ரூ.30.22 கோடி மதிப்பீட்டில் 2181 சுய உதவி குழுக்களை சேர்ந்த 26172 உறுப்பினர்களுக்கு கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்தறை அமைச்சர் எ.வ.வேலு, பெண்கள் படிக்க வேண்டும் என்று கூறியது திராவிட இயக்கம்; என்றும் இந்த திராவிட இயக்கம்தான் பெண்களுக்கு வாக்குரிமையை ஏற்படுத்தி கொடுத்ததாகவும் இல்லை என்றால் தற்போது பெண்களுக்கு வாக்குரிமை இல்லை என்றும் பேசினார். மேலும் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுத்தது, அரசுப்பணியில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு, உள்ளாட்சியில் ஊராட்சி தலைவராகவும் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் ஒன்றியக் குழு தலைவராகவும் மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும் வரும் வகையில் பெண்களுக்கு உள்ளாட்சியின் 33 சதவீதம் இடஒதுக்கீடு பெற்றுத்தந்தது. சட்டம், காவல்துறையில் பெண்களை பணியில் அமர்த்தியது கலைஞர்தான் என்றும், எ.வ.வேலு தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் முதன் முதலில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது மட்டுமின்றி பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் கலைஞர் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திருத்தணியில் 1,831 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்துள்ளார் என்று பேசினார்.