வேலூர் வேலப்பாடியில் குடிபோதையில் தகராறு செய்த கணவனை ஆத்திரம் தாங்காமல் வெட்டிகொலை செய்த பெண் கைதாகியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வேலூர் வேலாப்பாடியை சேர்ந்தவர்  குமரவேல் வயது (55) என்பவர் இவர் கடந்த 2- ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனி ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார. இந்நிலையில் அந்த வேலையை விட்டுவிட்டு வேலை ஏதும் இல்லாமல் வீட்டில் மது அருந்திக்கொண்டு வெட்டியாக  ஊரை சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.


குமரவேலின் மனைவி கோமதி வயது (48) இவர் வேலூரில் உள்ள அரசு வங்கி  ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.அதனைத்தொடர்ந்து குமரவேல் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி மனைவியிடமும், மகள்களிடமும் சண்டை போடுவதாகவும் மனைவியை சந்தேகப்பட்டு தினமும் சித்திரவதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குமரவேல் சித்ரவதை செய்வது தொடர்கதையாகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், வழக்கம் போல் 10-ம் தேதி நேற்று இரவு  குடித்துவிட்டு வந்த குமரவேல்  மனைவி கோமதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் முதலில் வாய் தகராறு ஏற்பட்டு சில மணி நேரங்கள் நீடித்துள்ளது. பின்னர் இந்த தகராறு  கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரம் அடைந்த குமரவேல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து  முதலில் மனைவி கோமதியின் நெற்றியிலும், கழுத்திலும்  கிழித்ததாக  சொல்லப்படுகிறது. இதில் கோமதி படுகாயமடைந்துள்ளார். சண்டையை தடுக்கச் சென்ற மகள் கையிலும் கத்தியால் லேசாக கிழித்து உள்ளார் குமரவேல். இந்த சண்டை தொடரவே ஒரு கட்டத்திற்கு மேல் பொருத்து கொள்ள முடியாத மனைவி கோமதி கணவன் குமரவேல் வைத்திருந்த கத்தியை பிடுங்கி கணவன் குமரவேல் பின்பக்க கழுத்து மற்றும் முன்பக்க கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த குமரவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.




குமரவேல் உயிரிழந்த நிலையில், மனைவி கோமதியும் அவருடைய மகளும் செய்வது அறியாமல் கதறி அழுதுள்ளனர். கதறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, குமரவேல் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து வேலூர் தெற்கு காவல்நிலைய காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த குமரவேலின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இந்த சண்டையில் படுகாயம் அடைந்த குமரவேல் மனைவி கோமதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.