திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையான ஜவ்வாது மலை உள்ளது .இதில் மலைவாழ் கிராம மக்கள்  வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய நடைமுறை மிகவும் வித்தியாசமான ஒன்று தெய்வங்களை வழிபடும் முறை போன்ற அனைத்திலும் இவர்களின் நடைமுறை வழக்கத்தை விட மாறாக இருக்கின்றது.  


அங்குள்ள 36 மலைக்கிராமங்களின் தலைமை நாட்டாமையாக  திருவண்ணாமலை மாவட்டம்  ஜவ்வாதுமலையில் மல்லிமேடு என்ற கிராமத்தில் வசிக்கும்  சின்னான்டி என்பவர் இருந்து வந்தார். இவர்  6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து, மலைக்கிராம மக்களுக்கு உடனடியாக ஒரு நாட்டாமை தேவை என்பதால், மக்களின் ஐதீகப்படி அவருடைய வாரிசுக்கு தான் தலைமை நாட்டாமை பட்டம் கொடுக்க வேண்டும்.


 




என மலை கிராம மக்கள் சார்பில் குறி வைத்து கேட்கப்பட்டது. அதில், சின்னான்டியின் மகன்கள் யாருக்கும் தலைமை பட்டம் வழங்க அனுமதி கிடைக்கவில்லையாம். ஆனால் அவரது 9 வயது பேரன் சக்திவேலுவுக்கு வழங்க அனுமதி கிடைத்ததாம். இதனால் மக்கள் ஆச்சரியமடைந்தனர். இருப்பினும் மலைக்கிராம மக்களின் வழக்கம்படி சின்னான்டியின் பேரன் 9 வயது சிறுவனுக்கே தலைமை நாட்டாண்மை பட்டம் சூட்ட மலைவாழ் மக்களின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. 


அதன் படி மலைவாழ் மக்களின் ஒருமித்த கருத்தோடு, 9 வயது சிறுவனுக்கு நாட்டாமை பட்டம் சூட்டப்பட்டது. திருவண்ணாமலை , வேலூர், திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 36 மலை கிராமங்களுக்கு ஒருவர் நாட்டாமையாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் மலையில் நடக்கும் பொது பிரச்னை, குடும்ப தகராறு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்ப்பு சொல்வது மற்றும் மலை நாட்டில் ஊரான்(அது ஒரு பொறுப்பு) இறந்தால் புது ஊரான் தேர்வு செய்து பட்டம் வழங்குவது உள்ளிட்டவைகளை செய்வார்.



இதற்கான முடிசூட்டும் விழா ஜவ்வாதுமலை அடுத்த மல்லிமேடு மலை கிராமத்தில்  நடைப்பெற்றது. இந்த விழாவில் 36 மலை கிராமங்களை சேர்ந்த ஊரான்கன், மூப்பன்கள், மலை கிராமமக்களின் மக்கள் ஒன்றாக சேர்ந்து சக்திவேலை ஊர்வலமாக அழைத்து வந்தனர். அவரை ஊர் நாட்டாமையாக நாற்காலியில் அமர வைத்து அனைவரது முன்னிலையில் தலைமை நாட்டாமை பட்டத்தை வழங்கி  , செங்கோல் கொடுத்து கவுரவப்படுத்தினர். 


 




 


 


இது குறித்து மலைவாழ் மக்களிடம்  ABP நாடு சார்பாக கருத்து கேட்டோம்... 


‛‛எங்கள் மலையில் உள்ள கிராம மக்களின் அனைவருக்கும் சிறுவனே பஞ்சாயத்து செய்வார். அதற்கான முழு அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுவிட்டது. தற்போது தலைமை நாட்டாமையாக தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், சிறுவனாக இருந்தாலும் அவருடைய பக்க பலமாக அவருடைய தந்தை மற்றும் கடவுள் இருப்பார்கள். இவர்களின் வம்சாவழியில் நாட்டாமையாக இருந்தவர்களின் ஆசிர்வாதமும் அவருக்கு உண்டு. சிறுவயதில் இருந்தே பயிற்சி எடுத்து வளர்ந்ததும் எங்களது பிரச்னைகளுக்கு சுயமாகவே சிந்தித்து செயல்பட்டு தீர்வு கூறுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது,’’ என்றனர். 


 




 


அதன் பின்னர், எங்கள் ஊர் புதிய நாட்டாண்மை விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கறி விருந்து வைக்கப்பட்டது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கும் உள்ள கிராம மக்களுக்கு பஞ்சாயத்து செய்ய 9 வயது சிறுவனை தேர்வு செய்திருப்பது, ஆச்சிர்யமான ஒன்றே.