செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தாலுகா பெரியகாயம்பாக்கத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன் வயது ( 55), இவருடைய மகன் வெங்கடேசனுக்கு அச்சரப்பாக்கத்தில் திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து வந்த மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் என 40 நபர்கள் மீண்டும் திருமண வீட்டார் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா பேருந்தில் காஞ்சிபுரம் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அச்சரப்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வழியாக பேருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து வந்தவாசியை கடந்தபோது பேருந்து திடீரென தீப்பற்றியது. பேருந்தில் இருந்து தீயில் கருகிய வாசத்தை பேருந்து ஓட்டுனர் உணர்ந்தார். ஆனாலும், இது வேறு ஏதாவது வாசமாக இருக்கலாம் என்று ஓட்டுநர் கருதி பேருந்தை தொடர்ந்து ஓட்டிச் சென்றுள்ளார்.




 


மேலும், வந்தவாசி அடுத்த மேல்மா என்ற இடத்தை பேருந்து கடந்தபோது  வலதுபுற டயர் திடீரென வெடித்தது. இதில் தறிகெட்டு ஓடிய பேருந்து பாலத்தில் மோதியது. அப்போது பேருந்தின் டீசல் டேங்க் பாலத்தில் உரசியதால் பேருந்து திடீரென தீப்பற்றியது. இதனை கண்ட திருமண வீட்டார் கூச்சலிட்டனர். உடனே தீ மளமளவென பேருந்து முழுவதும் தீ பரவியது. இதனால் திருமண வீட்டார் அலறி கூச்சலிட்டனர். பேருந்தில்  இருந்து பயணிகள்  இறங்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் ஒருவர்கொருவர் முண்டியடித்து வெளியே செல்ல முயன்றதால் பேருந்தில் இருந்து அவர்களால் இறங்க முடியவில்லை. பேருந்து  முழுமையான குளிர்சாதன வசதி கொண்டதாகவும், மூடப்பட்ட கண்ணாடிகளை கொண்டதாகவும் இருந்ததால் பயணிகள் என செய்வதறியாது தவித்தனர். அப்போது சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுனர் இதை பார்த்து உடனடியாக லாரியை நிறுத்தி லாரியில் டயர் கழட்டுவதற்கு பயண்படும்  இரும்பு ராடால் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை  வெளியேற வழி ஏற்படுத்தினார். உடனடியாக பயணிகள் அனைவரும் வேகவேகமாக வெளியேறினார்.


 




அப்போது பேருந்து முழுமையாக தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 4 நபர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து உடனடியாக வந்தவாசி வடக்கு காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை அறிந்த காவல்துறையினர்  துணை ஆய்வாளர் வரதராஜ் மற்றும் காவலர்கள், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து பேருந்து முழுவதும்  பரவிய தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ஆனாலும் பேருந்து  முழுமையாக தீயில் எரிந்து எலும்புக்கூடானது. இந்த சம்பவம் குறித்து வந்தவாசி வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகளை தீ பேருந்து முழுவதும் பரவதற்குள் லாரி ஓட்டுனர் காப்பாற்றியதால் உயிர் சேதம் ஏற்படவில்லை