வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடக, ஆந்திரா வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  ஆந்திர மாநிலத்தில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து பாலாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிளை ஆறுகளில் பாயும் வெள்ளமும் பாலாற்றில் கலக்க தொடங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு லட்சம் கன அடி நீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு பெய்த பெரு வெள்ளத்தின் போது கூட 45 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டது. சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பாலாற்றில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி ஆற்றில் நீர் கலந்து ஒருவித காரணத்தினாலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நாய்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.



பாலத்தின் வழியாக ஆற்றில் விழுந்த தனது குட்டி நாயை காப்பாற்ற தாய் நாயும் இறங்க இரு நாய்களும் வெள்ளத்தில் சிக்கி கொண்டிருந்தன. தீயணைப்பு மீட்பு துறையினரின் கடும் போராட்டத்தால் சிக்கிக்கொண்ட இரு நாய்களும் மீட்கப்பட்டன. இந்த இரு நாய்களின் பாசப்போராட்ட விடியோ காண்போர்களை உருக வைக்கிறது. பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.



முதலில் ஒரு இடத்தில் நின்றுகொண்டிருக்கும் இரு நாய்களும் எப்படியாவது வெளியே செல்ல வழியை தேடுகின்றன. திடீரென மேடான பகுதியில் இருந்து வெள்ளநீர் வேகமாக நகர்ந்து செல்லும் இடத்தில் குதிக்கிறது அந்த குட்டி நாய். அதனை பாலத்தில் இருந்து பார்ப்பவர்கள் கண்டு பயந்து கத்துகிறார்கள். ஆனால் வெள்ளத்தில் குதித்த குட்டி நாய் நீந்த முயற்சிக்கிறது, நீரின் அதி வேகத்தால் ஒரு பக்கமாக அடித்து செல்வதை அங்குள்ள மக்கள் பரபரப்புடன் பார்க்கின்றனர்.



ஆனால் அகிருக்கும் செடிகளில் சிக்கி, ஒவ்வொரு செடியாக பிடித்து வேறு ஒரு மேட்டில் ஏறி நிற்கிறது. நின்று விட்டு தன் தாயை அழகாய் கத்தி அழைக்கிறது. பின்னர் அதனை தொடர்ந்து வந்த தாய் நாய், குட்டி நாயை பின்னால் வர விட்டு, வழி காட்டி கூட்டி செல்கிறது. ஒரு வழியாக ஓரமாக மீட்பு பணியினர் அணுக்கக்கூடிய கரையை அடைந்த நாய்கள் இரண்டையும் காப்பாற்றி மேலே எடுத்து வந்தனர்.



வரலாறு காணாத இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக காஞ்சிபுரம் பாலாற்றின் தரைப்பாலம் அதேபோல வாலாஜாபாத் பாலாற்றின் தரைப்பாலம் முழுமையாக நிரம்பி உள்ளது. நிரம்பியுள்ள தரை பாலத்தின் மேல் நீர் இடுப்பு அளவிற்குச் சென்று கொண்டிருக்கிறது. அதேபோல ஆற்றிலிருந்து நிரம்பிய வரும் நீரானது வெளியேறி வாலாஜாபாத்தில் புகுந்துள்ளது. இதனால் வாலாஜாபாத் சாலைகளில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது அதேபோல் அருகில் இருக்கும் அரசு பள்ளியிலும் நீர் புகுந்துள்ளது . வரலாறு காணாத வெள்ளத்தை பார்ப்பதற்காக ஆர்வமுடன் பொது மக்கள் அவ்விடத்தில் கூடி உள்ளதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர். அதேபோல இதனால் வாலாஜாபாத் பகுதியிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.