தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கடுமையாகப் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை அனைத்துத் தரப்பினருக்கும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் தமிழகம் முழுவதும் பலமான சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. அதிலும் குறிப்பாக வட தமிழக கடலோர மாவட்டங்கள் மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின. வேலூர் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பேரணாம்பட்டு, மசூதி தெருவில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 9 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பேர்ணாம்பட் பகுதியில் அஜித்தா தெருவில் உள்ள இரண்டு குடும்பத்தினர் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணத்தினால் அருகிலிருந்த ஒரு வீட்டுக்குச் சென்று மாடிவீட்டில் அவர்கள் தங்கியுள்ளனர். தொடர் மழையால் நேற்று காலை கட்டிடம் இடிந்து விழுந்தது. பேரணாம்பட்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், மழையால் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்றார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி. அப்போது, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த குழந்தையின் சடலத்தைப் பார்த்த அமைச்சர் ஆர்.காந்தி துக்கம் தாளமுடியாமல் கதறி அழ ஆரம்பித்தார். இந்நிகழ்வு அங்கிருந்தோரை வேதனையில் ஆழ்த்தியது.
வேலூர் மாவட்டத்துக்கு 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது. குடியாத்தம் செம்பள்ளி கிராமத்தில் மழைநீர் சூழ்ந்ததால் தவித்து வரும் 230 பேரை மீட்கவும் ஒரு குழு சென்றுள்ளது. பேரணாம்பட்டு அருகே வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கவும் ஒரு குழு சென்றுள்ளது. ஒரு குழுவிற்கு தலா 20 பேர் வீதம் 40 பேர் தற்போது வேலூர் மாவட்டத்துக்கு சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 2 தேசிய பேரிடர் மீட்பு குழு புறப்பட்டு சென்றுள்ளது. சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல பாண்டியன் மற்றும் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.