ராணிப்பேட்டை காஞ்சனகிரி பகுதியில் அமைந்துள்ள மலைக்கோவிலின் உண்டியலிலிருந்து 10,000 ரூபாய் பணத்தை திருடியவர் மன்னிப்பு கடிதத்துடன் பணத்தை உண்டியலில் திருப்பி செலுத்திய ருசீகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே புகழ்பெற்ற காஞ்சனகிரிமலையில் ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இக்கோவிலின் வளாகத்தில் 1008 சுயம்பு லிங்கங்கள் உள்ளது. சித்ரா பௌர்ணமி அன்று நடைபெற்ற சில தினங்களுக்குள், கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது. பின்னர் கோவில் நிர்வாகத்தினர் காலையில் சென்று கோவிலில் பார்த்தபோது கோவில் உண்டியல் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்தினர் சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று கோவில் நிர்வாகத்தினர் 1008 சுயம்பு லிங்கங்கள் முன்பு வைக்கப்பட்டு இருந்த உண்டியலை திறந்து அதிலிருந்த பக்தர்கள் காணிக்கையிட்ட பணத்தினை எடுத்தனர். அப்போது உண்டியலில் பக்தர்கள் செலுத்திய பணத்துடன், மேலும் ஒரு கடிதமும் அதனுள்ளே 500 ரூபாய் நோட்டுகள் 20 இருந்தது. (ரூ 10,000). அதனைத்தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் அந்த சீட்டீனை பிரித்துப் பார்த்தனர். அப்போது அதில், ’என்னை மன்னித்து விடுங்கள். சித்ரா பௌர்ணமி கழித்து, நான் தெரிந்தே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டேன். அப்போது இருந்து எனக்கு மனசு சரியில்லை, நிம்மதியில்லை, அப்புறம் வீட்டில் நிறைய பிரச்னை வருகிறது. எனவே நான் மனம் திருந்தி எடுத்த பணத்தை அதே உண்டியலில் ரூபாய் 10,000 போட்டு விடுகிறேன்.
எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். கடவுளும் என்னை மன்னிப்பாரா என தெரியாது’ என குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த கோவில் நிர்வாகத்தினர். இந்த கடிதத்தை சிப்காட் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் மனம் திருந்தி மீண்டும் பணத்தை உண்டியலில் மன்னிப்பு கடிதத்துடன் செலுத்தியது பரபரப்பையும், இறை பக்தியின் பெருமையை உணரச் செய்வதாகவும் இருந்தது என அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்