வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் வழியே பாயும் பென்னையாற்றின் குறுக்கே உள்ள 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 156 ஆண்டு பழமையான ரயில்வே பாலத்தில் கடந்த 23 ஆம் தேதி மாலை விரிசல் கண்டறியப்பட்டது.
  இதனையடுத்து பயணிகளின் பாதுகாப்பு கருதி அன்று மாலை முதலே அவர் வழியாக இயக்கப்படும் சுமார் 22 ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. 

 

பென்னையாற்றின் குறுக்கே உள்ள இந்த ரயில்வே பாலமானது சுமார் 600 மீட்டர் நீளமும், 56 கண்களுடன் கட்டபட்டுள்ளது.பாலத்தில் சேதம் கண்டறியப்பட்டதற்க்கு மறுநாள் 24-ஆம் தேதி காலை சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேசன் தலைமையிலான குழுவினர் பாதிப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக பென்னை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு சுமார் 70 ஆயிரம் கனஅடி வரை பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக பாலத்தின் 38, 39 ஆகிய தூண்கள் பாதிக்கப்பட்டு விரிசல் அடைந்ததாக கூறியிருந்தார். இருந்தபோதும் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வரும் மூன்று நாட்களுக்குள் பணிகளை முடித்து போக்குவரத்தை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் கூறியிருந்தார்.

 



 

அதனையடுத்து கடந்த மூன்று நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இரவு பகலாக தொடர்ந்து பணியாற்றி முதல்கட்டமாக 39 வது தூணை சுற்றி ஏற்பட்டிருந்த மண்ணரிப்பைத் தடுக்கும் வகையில் சுமார் 3 அடி அகலம் 2 அடி ஆழத்திற்கும் கான்கிரீட் அமைப்பை ஏற்படுத்தி பாலத்தை பலப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து இரு கண்களுக்கும் இடையிலும் பாலத்திற்கு  துணை கொடுக்கும் வகையில் இரும்பாலான கட்டுமானம் எழுப்பப்பட்டு பாலத்திற்கு துணை கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து விரிசல் கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ளே சிமெண்ட் கலவை செலுத்தப்பட்டு பாலம் பலப்படுத்தப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த தொடர் பணி நேற்றிரவு சுமார் 8.30 மணி அளவில் நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து முதல் கட்டமாக ஒரே ஒரு என்ஜினை கொண்டு சீரமைக்கப்பட்ட பாலத்தின் மீது மிக குறைந்த வேகத்தில் செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த முதல்கட்ட சோதனையின் போது எந்தவித பாதிப்பும் பாலத்திற்கு ஏற்படாமல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது. 




 

இதன் தொடர்ச்சியாக 1050 டன் எடை கொண்ட காலியான ஒரு சரக்கு ரயிலையும், அடுத்தகட்டமாக 2200 டன் எடை கொண்ட சரக்கு ஏற்றிச் செல்லும் மற்றொரு சரக்கு ரயிலையும் தொடர்ச்சியாக பாலத்தின் மீது 5 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கச் செய்து ஆய்வு செய்தனர் இந்த மூன்று ஆய்விலும் பாலத்திற்கு எந்தவித பாதிப்பும், அதிர்வும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த ஊழியர்கள் கைதட்டி ஆரவாரத்துடன் கொண்டாடினர்.  இதற்கு அடுத்தபடியாக இரவு 10.14 மணிக்கு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் "மெயில்" எக்ஸ்பிரஸ் ரயிலை பாலத்தின் மீது குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு தற்போது முதல் பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

 


 

சோதனை ஓட்டத்திற்கு முன்பு ஐயர்களை வைத்து சீரமைக்கப்பட்ட பாலத்திற்கு கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து, பூஜை செய்து அதிகாரிகளும் ஊழியர்களும் வழிபட்டனர். பாலத்தில் சேதம் கண்டறியப்பட்ட மறுநாளில் இருந்து சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் நேரடியாக களத்திற்கு வந்து ஆய்வு செய்து தொடர்ச்சியாக மூன்று நாட்களும் சம்பவ இடத்திலிருந்து தனது நேரடிக் கண்காணிப்பில் பணிகளை மேற்கொண்டு விரைந்து இப்பணியை தனது குழுவோடு சேர்ந்து முடித்துள்ளார்.