முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தமிழக அரசு வழங்கிய 30 நாள் பரோலில் வெளியே வந்துள்ளார்.



சிறையில் இருந்து வெளியே வந்த நளினி


தனது தாய் பத்மாவின் உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக்கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு அரசு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று காலை வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து நளினி வெளியே வந்துள்ளார்.


காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள தனது தாயார் பத்மா வாடகைக்கு தங்கி உள்ள வீட்டில் நளினி தங்க உள்ளார். சுழற்சி முறையில் 2 DSP- தலைமையில் துப்பாக்கி ஏந்திய 50 காவலர்கள் இங்கு 30 நாட்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், அவரது வீட்டில் இருந்து 10 மீட்டர் தொலைவில் பேரிகார்டு அமைத்து வெளி ஆட்கள் உள்ளே நுழையாதபடி கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும், பரோலில் வெளியே வந்துள்ள, நளினி அச்சு / காட்சி ஊடகங்களுக்கு எந்த பேட்டி கொடுக்கக் கூடாது, அரசியல் பிரமுகர்களை சந்திக்கக்கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது, குறிப்பிட்ட அளவை காட்டிலும் வெளியில் செல்லக்கூடாது, வெளியாட்களை சந்திக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல்,  அருகில் உள்ள காவல்நிலையத்தில் தினமும் சென்று கையெழுத்து இட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  


ஏற்கனவே மூன்று முறை முழு பரோலில் வெளியே வந்துள்ள நளினி, தற்போது நான்காவது முறையாக பரோலில் வெளியே வருகிறார். முதலில் தனது சகோதரன் திருமணத்திற்கும் அடுத்து தனது மகள் திருமண ஏற்பாட்டை கவனிக்கவும், பின்னர் தனது தந்தை இறப்புக்கும் தமிழக அரசு நளினிக்கு பரோல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.






கடந்த அதிமுக ஆட்சியில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், நளினி, ரவிசந்திரன் ஆகிய ஏழு பேரரையும் அரசியல் அமைப்பு சட்டம் 161ன் படி விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அது குறித்து இதுவரை எந்த முடிவும் வெளியிடாமல் இருக்கிறது.


Also Read: Gold-Silver Rate, 27 Dec: வாரத்தின் முதல் நாளில் விலை குறைந்த தங்கம், வெள்ளி - இன்றைய முழு விவரம்