குடியாத்தம் (Gudiyatham news) வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஓலக்காசி அரசு உயர் நிலை பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனிடையே இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று திங்கட்கிழமை பள்ளி வழக்கம் போல் திறக்கப்பட்டது. இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் ஆலாம்பட்டரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவ ஞானம் என்பவரது மகள் பூவிகா வயது (12) இன்று காலை பள்ளிக்கு வழக்கம் போல் வந்துள்ளார். பிறகு வகுப்பறைக்கு சென்று வந்த மாணவி பள்ளியின் வளாகத்துக்குள் உள்ள கழிவறைக்கு தன்னுடன் பயிலும் சகமாணவிகளோடு உள்ளே சென்றுள்ளார். அப்போது கழிவறையில் பதுங்கி இருந்த பாம்பு பூவிகாவின் காலில் கடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளார் பூவிகா, அங்கு இருந்த மாணவர்கள் ஆசிரியரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் உடனடியாக பூவிக்காவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்துக்குள் கழிப்பறைக்குச் சென்ற மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வகுப்பறைகளில் தூய்மை நிலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிறுமிக்கு சிறிய அளவே விஷம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை முறிக்கும் வகையில் விஷ முறிவு மருந்து கொடுக்கப்பட்டு தற்போது சிறுமி நலமுடன் உள்ளதாகவும், 6 மணி நேரத்திற்கு அவரை நாங்கள் கண்காணித்து வருகிறோம். தற்போதைக்கு அச்சப்பட வேண்டிய அளவிற்கு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.