வேலூர் (Vellore News) வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே காட்பாடி-வேலூர் சாலையில் புதியதாக தம்பி என்ற பிரியாணி கடை திறக்கப்பட்டது. தம்பி பிரியாணி கடையில் திறப்பு விழா சலுகையாக ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம். ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால், ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என ஆஃபர் விட்ட நிலையில் காலையில் கடை திறந்ததும் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். மதியம் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலூர் செல்லும் சாலையில் நீண்ட வரிசையில் குடை பிடித்தபடியும், கையால் முகத்தை மறைத்தபடியும் காத்திருந்தனர். இதனால், சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஓடை பிள்ளையார் கோவில் மற்றும் காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


 




இந்த நிலையில் அந்த வழியாக சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் கேட்டபோது, பிரியாணி கடை திறப்பு விழாவில் பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் கூடியுள்ளதை தெரிந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து, ஆட்சியர் உடனடியாக அங்கு சென்று மக்கள் நீண்ட நேரமாக வெயிலில் நின்று கொண்டிருந்ததை அறிந்து கடை உரிமையாளரை அழைத்து மிகவும் கடிந்துகொண்டார். எந்த ஒரு முன்னேற்பாடுகளையும் ஏற்படுத்தாமல் வெயிலில் மக்களை நிற்க வைப்பது என்ன நியாயம் என்றும் மக்களுக்கு பிச்சையா போடுறீங்க காசுக்குதானே விற்பனை பன்றீங்க. அப்படி இருக்கும்போது முறையான முன்னேற்பாடு செய்ய வேண்டாமா என்றும், வாடிக்கையாளர்களுக்கு வெயிலில் அவதிபடாதவாறு நிழற்கூடமோ, இருக்கை வசதி எல்லாம் செய்து கொடுக்காமல் இப்படி அவதிப்படுகிறார்கள் என கோபமாக கேட்டார்.




பிரியாணி கடை மூடி சீல் வைக்க கலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவு 


மேலும் பொதுமக்களை கலைந்து செல்லும் படியும், கடையை மூடி சீல் வைக்கவும் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் கடையை மூட முயன்றனர். ஆனால் வாடிக்கையாளர்கள் கலைந்து செல்லாமல் கடைக்குள் சென்றுவிட்டனர். பின்னர் அனைவரையும் விரட்டியடித்து காவல்துறையினர் கடையை மூடினர். தொடர்ந்து அங்கிருந்த எஸ்ஐயை அழைத்து இனி இதுபோன்ற விதிமீறல்கள் நடந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் எச்சரித்து சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் விசாரணையில், புதியதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு மாநகராட்சியிடம் இருந்து தொழில் உரிமம் சான்று பெறாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். கடை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசையுடன் பிரியாணி வாங்க சென்ற பிரியாணி பிரியண்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அதில் ஒருசிலர் வருத்தப்பட்டனர், இப்படி செய்தது சரி என்றும் தெரிவித்தனர்.