வேலூர் மாவட்டத்தை அடுத்த சத்துவாச்சாரியில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பெண் முன்னதாக புகார் அளிக்காதநிலையிலும் வேறொரு வழக்கின் மூலம் காவல்துறையினர் உண்மையை கண்டறிந்து கைதும் செய்துள்ளனர்.
குற்றவாளிகள் சிக்கியது எப்படி..?
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு 2 இளைஞர்கள் போதையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர், 2 நபர்களையும் பிடித்து விசாரணை செய்தபோது. அவர்கள் இதற்கு முன் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, முழு போதையில் இருந்த 2 நபர்களையும் காவல்நிலையம் அழைத்து சென்ற தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் இருவரும் மேலும் 3 நபர்களுடன் சேர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக இளம் சிறார் உட்பட 4 நபர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகிறது. தலைமறைவாகி உள்ள 5 வது நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதில், முக்கியமான தகவல் என்னவென்றால் பாதிக்கப்பட்ட பெண் சார்பிலோ, அந்த பெண்ணுடன் இருந்த ஆண் நண்பர் சார்பிலோ எந்தவொரு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காவல்துறையினர் புகார் பெற்றது எப்படி ?
குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்துவாச்சாரி காவல்துறையினர் தானாக வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கியது. முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொண்ட காவல்துறையினர் குற்றவாளிகள் அளித்த தகவல் உண்மையா என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் சம்பவம் குறித்து வெளியே சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்தும், தன்னிடம் இருந்து திருடப்பட்ட பணம் மற்றும் நகை குறித்த விவரத்தை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அந்த பெண் தனது சொந்த ஊரான பீகாருக்கு சென்றுள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், நேற்று பிற்பகல் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஈ மெயில் மூலம் அந்த பெண் புகார் மனு அளித்துள்ளார்.
புகாரில் கூறப்பட்டது என்ன ?
நானும், என்னுடன் இருந்த ஆண் நண்பரும் கடந்த 16 ம் தேதி இரவு வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்து விட்டு நள்ளிரவு 01.00 மணியளவில் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினோம் . அந்த ஆட்டோ போகும் வழியில் மருத்துவமனை நோக்கி செல்லாமல் திசைமாறி சென்றது. தாங்கள் அதை கேட்டபோது அந்த ஆட்டோவில் வந்த 5 நபர்கள் தங்களை மிரட்டி ஒரு மறைவான இடத்திற்கு கடத்திச்சென்று, அங்கு தங்களிடமிருந்த செல்போன்கள், பணம் சுமார் ரூ . 40,000 / மற்றும் 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி அபகரித்துக் கொண்டனர். மேலும் அந்த நபர்கள் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் , எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். தற்போது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் 2 மைனர் உட்பட நான்கு பேரை கைது செய்தநிலையில், தலைமறைவாகியுள்ள 5வது நபரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்